ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்!
கடந்த 2023 ஓணம் பம்பரில், தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்தது.
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் (Kerala Onam Bumper lottery ticket) விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குலுக்கலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ரூ.25 கோடி பரிசு அடித்துவிடாதா? என்ற ஏக்கத்தில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். கேரளாவில் தினந்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதற்கு ரூ.1 கோடி முதல் பரிசாக அளிக்கப்படுகிறது. இதுபோக, வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி குலுக்கல்களும் நடைபெறுகின்றன.
கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் லாட்டரி, விஷு பம்பர், சம்மர் பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஓணம் சீசன் என்பதால் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. டிக்கெட்டில் முதல் பரிசு அடித்தால் ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதால், கேரள லாட்டரி பிரியர்களிடம் இந்த டிக்கெட்டிற்கு பெரும் ஆர்வம் நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக டிக்கெட் விற்பனை அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். கேரள லாட்டரிகளைப் பொறுத்தவரை, தமிழக எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில்தான் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது.
கடந்த மான்சூன் பம்பர் டிக்கெட்டும், கடந்த ஓணம் பம்பர் டிக்கெட்டும் கூட பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகமாக விற்பனையானது. கடந்த 2023 ஓணம் பம்பரில், தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்தது. கேரளாவிற்கு மருத்துவ காரணங்களுக்காக சென்றுவிட்டு திரும்பும் போது வாங்கப்பட்ட TE 230662 என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது. கடந்த ஆண்டு வயநாட்டில் டிக்கெட் வாங்கிய கர்நாடகத்தை சேர்ந்த ஒரு மெக்கானிக் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப்பிற்கு முதல் பரிசு விழுந்து, ஒரே நாளில் கேரளா முழுவதும் பிரபலமானார். இந்த வரிசையில், "இந்த ஆண்டும் நமக்கும் முதல் பரிசு அடித்துவிடாதா?" என்ற ஆசையில் கேரள லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
டிக்கெட் விற்பனையில் முதல் இடத்தில் பாலக்காடு தான் இருப்பதாக லாட்டரி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அடுத்த இடத்தில் திருவனந்தபுரம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாதமே உள்ளதால், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. முதல் பரிசு ரூ.25 கோடி , ஆறுதல் பரிசு ரூ.5 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.1 கோடி (20 டிக்கெட்டுகளுக்கு), மூன்றாவது பரிசு ரூ.50 லட்சம், நான்காவது பரிசு ரூ.5 லட்சம், ஐந்தாவது பரிசு ரூ.2 லட்சம், ஆறாவது பரிசு: ரூ.5 ஆயிரம். கேரளா, பஞ்சாப் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரிகளுக்கு மாநில அரசுகள் தடை விதிக்கவில்லை.கேரளாவைப் பொறுத்தவரை லாட்டரிகளை மாநில அரசே அச்சிட்டு விற்பனை செய்கிறது. கேரள அரசுக்கு லாட்டரி விற்பனை வாயிலாக பெருமளவு வருவாய் கிடைக்கிறது.





















