One Nation One Election: நாடாளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரையில் ஒரே நேரத்தில் தேர்தலா? பரிந்துரைகளை வழங்க குழுவை அமைத்த மத்திய அரசு
வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![One Nation One Election: நாடாளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரையில் ஒரே நேரத்தில் தேர்தலா? பரிந்துரைகளை வழங்க குழுவை அமைத்த மத்திய அரசு Notification issued constituting High Level Committee under former President Ram Nath Kovind to examine One nation One election One Nation One Election: நாடாளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரையில் ஒரே நேரத்தில் தேர்தலா? பரிந்துரைகளை வழங்க குழுவை அமைத்த மத்திய அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/9dd4caac7c583b44a6597e1d3d172d091693660979356729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியானது.
நாடாளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரையில் ஒரே நேரத்தில் தேர்தலா?
இந்த நிலையில், மக்களவை, சட்டப்பேரவை தொடங்கி பஞ்சாயத்து வரை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து மத்திய அரசு இன்று அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
8 பேர் கொண்ட குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊல் தடுப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி, நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என். கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த உயர்மட்டக் குழுவின் கூட்டங்களில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் வேலை என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தற்போதுள்ள விதிகளை கருத்தில் கொண்டு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வேறு ஏதேனும் சட்டம் அல்லது விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.
தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டப்பேரவை, நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது கட்சி தாவல் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்து சாத்தியமான தீர்வுகளை பரிந்துரைக்கும். எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவைப்படும் கட்டமைப்பையும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் காலக்கட்டத்தையும் பரிந்துரைக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)