Chinese Phones : ரூ.1000கோடி வரி ஏய்ப்பா? சீன மொபைல்களுக்கு குறி வைத்த இந்தியா! அமைச்சர் சொன்னது என்ன?
இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்தில் சீன மொபைல் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாகவும் பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது.
சீன மொபைலுக்கு தடையா ?
ஸ்மார்ட்போன் மட்டுமல்லாது கேட்ஜெட்ஸ் சந்தையில் தனக்கென தனி மார்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது சீனா. விலை குறைவானது முதல் அதிகமானது வரையிலும் “மேட் இன் சைனா”தான். அவ்வபோது சீன மொபைல் போன்களை புறக்கணிக்க வேண்டும் என்ற செய்திகளும் இணையத்தில் உலா வரும். ஆனாலும் அதற்கான மவுசு ஒரு போதும் குறையவில்லை. வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்தில் சீன மொபைல் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாகவும் பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு , சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்தும் நிறுவன பரிவர்த்தனைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது. மேலும் அதில் சில முன்னணி பிராண்டுகளின் விற்பனையை தடை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக 12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் மொபைல்களின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் பரவின.
அந்த எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை :
பொதுவாக 12 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட் மொபைல் பயனாளர்களே அதிகம் . இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , தற்போது 12 ஆயிரத்திற்கும் குறைவான ஸ்மார்ட்போன்களை தடை செய்யும் திட்டம் மத்திய அரசிற்கு இல்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று (திங்கள் கிழமை ) தெரிவித்துள்ளார்.உலக மயமாக்கலில் இருந்து உள்ளூர் மயமாக்கல்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட அவர் “ நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு அதனால் நாம் வெளிநாட்டு பிராண்டுகளை மட்டும் விலக்குவதில் அர்த்தமில்லை என்றார். சில சீன பிராண்டுகளுடன் நாங்கள் வெளிப்படத்தன்மை குறித்த பிரச்சனைகளை எழுப்பியுள்ளோம் . ஆனாலும் அவை அதிக இறக்குமதிகளை செய்யும் என எதிர்பார்க்கிறோம். சீன நிறுவனங்களும் அதைத்தான் விரும்புகின்றன என்ற அவர் ,விநியோகச் சங்கிலி, குறிப்பாக மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலி, மிகவும் வெளிப்படையானதாகவும் மிகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டும். இந்த 12 ஆயிரத்திற்கும் குறைவான மொபைல்போன்களின் தடை குறித்த எந்த ஒரு அறிக்கையும் முன்மொழியப்படவில்லை. அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் :
மேலும் உள்நாட்டு மதிப்பு கூட்டலை அதிகரிப்பது குறித்து தொழில்துறை அமைப்பான ICEA உடன் இணைந்து ICRIER தயாரித்த அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், 2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மின்னணு உற்பத்தி மற்றும் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைவதே அரசில் இலக்கு என்றார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர , வெளிநாட்டு ஸ்மார்ட்போன் அல்லது மூலப்பொருட்களின் இறக்குமதியை தடுப்பது அரசின் நோக்கமல்ல என்றார்.தற்போதைய மின்னணு உற்பத்தி உற்பத்தி 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.