பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி...கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்காக திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்...!
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி திமுக தலைவர்கள் ஸ்டாலின் வரை அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான களத்தை தயார் செய்ய முக்கிய கட்சிகள் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வீயூகம் அமைத்து வருகிறது.
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி:
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி திமுக தலைவர்கள் ஸ்டாலின் வரை அழைப்பு விடுத்து வருகின்றனர். இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், 2014ஆம் ஆண்டுக்கு பிறகான தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த சூழலில்தான், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் நேரடியாக மோதி கொண்டதால் நாட்டின் கவனம் இந்த தேர்தல் பக்கம் திரும்பியது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் என்பதால் பிரதமர் மோடி தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் வரை கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை வென்று படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊந்துசக்தியாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பதவியேற்பு விழா:
எனவே, கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிகழ்வாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக சிவக்குமாரும் பதவியேற்று கொள்கின்றனர்.
இந்த விழாவில், கலந்து கொள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று, மு.க.ஸ்டாலின், சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ககாலி கோஷ் தஸ்திதார் பங்கேற்கிறார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான தொடக்கமாக இந்த பதவியேற்பு விழா இருக்கலாம்" என்றார்.