கேரளா முதலிடம்.. டாப்பாக வந்த தமிழ்நாடு.. நிதி ஆயோக் வளர்ச்சி குறியீடு உணர்த்துவது என்ன?
நிதி ஆயோக்கின் நிலையான வளரச்சி குறியீட்டு இலக்குகளில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அம்சங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட மதிப்பெண்களின்படி தமிழ்நாடு மூன்றாம் இடம்.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள், வறுமையை ஒழித்து, பூமியை பாதுகாக்கவும் அனைத்து மக்களையும் அமைதியாகவும் வளமாகவும் வாழ வைக்கும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2015ஆம் ஆண்டு நிலையான வளரச்சி குறியீட்டு இலக்குகள் வகுக்கப்பட்டது.
நிலையான வளரச்சி குறியீடு உணர்த்துவது என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் இது ஏற்று கொள்ளப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப சமூக, பொருளாதார ரீதியாக இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், 2023-24ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை நிதி ஆயோக் அமைப்பால் நேற்று வெளியிடப்பட்டது. நிலையான வளரச்சி குறியீட்டு இலக்குகளில் 79 மதிப்பெண்களை பெற்று கேரளா முதலிடம் பிடித்துள்ளது. அதே 79 மதிப்பெண்களை பெற்று உத்தரகாண்டும் முதலிடத்தில் உள்ளது.
சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அம்சங்களை அளவுகோலாக வைத்து வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் பீகார் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 71ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவுக்கு முதலிடம் தமிழ்நாடு மூன்றாம் இடம்: கடந்த 2020-21ஆம் ஆண்டு, 66 மதிப்பெண்களை பெற்றிருந்தது. வறுமையை ஒழிப்பதிலும் ஏற்புடைய பணிகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றம், காலநிலை நடவடிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலில் 78 மதிப்பெண்களை பெற்று தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 77 மதிப்பெண்களை பெற்ற கோவா உள்ளது. அதற்கு நேர்மாறாக, பீகார், ஜார்க்கண்ட், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டெல்லி ஆகியவை முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம், "நிலையான வளரச்சி குறியீட்டின் கீழ் 16 இலக்குகளை அடைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை இந்தியா எட்டியுள்ளது.
நிலையான வளரச்சி குறியீட்டின் கீழ் பெரும்பாலான இலக்குகளை அடைந்தது மட்டும் இன்றி மற்ற நாடுகளை காட்டிலும் முன்னேறி இருக்கிறோம். 2030ஆம் ஆண்டுக்குள், சில இலக்குகளை அடைவோம். இதில், அரசுக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.