நிர்மலாவுக்கு நிதி.. அமித் ஷாவுக்கு உள்துறை..ராஜ்நாத்துக்கு பாதுகாப்பு.. முக்கிய துறைகள் யாருக்கு?
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்தறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங்குக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை தரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உள்பட 72 பேர் நேற்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்குக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு: அதேபோல, அமித் ஷாவுக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் கடந்த பதவிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட அதே துறைகள் இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகவும் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் தொடர உள்ளார். எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரான நிதின் கட்காரிக்கும் கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே துறை இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தொடர உள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அளிக்கப்பட்டுள்ளது. மோடியின் முதல் அமைச்சரவையில் நட்டா சிறிது காலம் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
ரயில்வேத்துறை யாருக்கு? மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, கிராமப்புற வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்ற கூட்டணி கட்சி தலைவரான எச். டி. குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பியூஷ் கோயலுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதானே தொடர உள்ளார்.
மற்றொரு கூட்டணி கட்சி தலைவரான ஜிதன் ராம் மாஞ்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லலன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை துறை வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முக்கிய தலைவரும் அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சருமான சர்பானந்த சோனாவாலுக்கும் கடந்த முறை ஒதுக்கப்பட்ட துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் வீரேந்திர குமாருக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட ரயில்வேத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பூபேந்திர யாதவுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: PM Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாக்காக்கள் அறிவிப்பு - யாருக்கு எந்த பொறுப்பு?