NIA Raids: 3 மாநிலங்கள்.. 40 இடங்களில் சோதனை ஏன்..? அதிகாரப்பூர்வ விளக்கமளித்த என்.ஐ.ஏ.!
கோவை கார் குண்டு- மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது.
கோவை கார் குண்டு- மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது.
சோதனையில் ரூ.4 லட்சம் மற்றும் மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது.
சென்னை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்பட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டிவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 60 இடங்களில் சோதனை நடத்தியது.
60 இடங்களில் நடைபெற்ற சோதனை:
கோவையில் கடந்தாண்டு உக்கடத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வெடித்து சிதறிய காரில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு மருந்து பொருட்கள் இருந்ததை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், சில முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 இடங்களில் என்,ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி, கோவை,சென்னை:
தமிழ்நாட்டில் சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி ஆகிய பகுதிகளிலும், கோவையில் 15 இடங்களிலும், திருநெல்வேலியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் கரிக்காதோப்பு பகுதியில் அன்வர்தீன் என்பவரது வீட்டில் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இவரது வீட்டில் வங்கிப்பணப்பரிவர்த்தனைக்கும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை அவரிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை, சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் இதுவரை பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, திருநெல்வேலி மாவட்டத்தில் கரிக்காதோப்பு பகுதி மட்டுமின்றி ஏர்வாடியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவையில் கடந்தாண்டு அக்டோபர் 23 ம் தேதி நடைபெற்ற உக்கடம் அருகே கார் வெடித்த வழக்கில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனை ஜமேசா முபின் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.