NEET PG Paper Leak: ரூ.70 ஆயிரத்துக்கு நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் லீக்? வெளியான தகவலால் அதிர்ச்சி!
NEET PG Paper Leak 2024: நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகி உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 70 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
70 ஆயிரம் ரூபாய்க்கு சில டெலிகிராம் சேனல்களில் நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் லீக் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட முறைகேடுகள்
இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக, நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத் தலைவர், தேர்வு மையங்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும். இதனால் முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
Hundreds of Telegram pages claiming to sale NEET PG papers , these frauds should be on Radar of Cyber crime and intelligence bureau because they might or might not have the papers which needs to be investigated.
— Dr.Dhruv Chauhan (@DrDhruvchauhan) August 7, 2024
Recieved these SS from some followers@CBIHeadquarters @JPNadda pic.twitter.com/TMWpSp1eo8
4 நாட்களில் நீட் முதுகலைத் தேர்வு
தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஆக.8ஆம் தேதி) வெளியாக உள்ளது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஷிஃப்டு விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகி உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 70 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வாட்ஸ் அப், டெலிகிராம் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகளை, சிலர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் இண்டெலிஜென்ஸ் பீரோ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.