"பாதுகாப்பு தாங்க.. இல்லனா வேலை செய்யமாட்டோம்" தேசிய அளவில் தீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரம் எடுக்கும் மருத்துவர்கள் போராட்டம்: மருத்துவமனைகளில் உள்ள நார்மல் வார்டுகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பயிற்சி மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA) நேற்றே அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டாவுக்கு FORDA சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே பயிற்சி மருத்துவருக்கு இவ்வளவு மோசமான அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது இல்லை என கொல்கத்தா பயிற்சி மருத்துவர் சம்பவத்தை குறிப்பிட்டுள்ளது. பணியில் இருக்கும் பெண் மருத்துவரின் கண்ணியத்தையும் உயிரையும் பாதுகாக்க முடியாத சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களுக்கு என பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள், உறவினர்கள் அவதி: இந்த வழக்கில் நீதி கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்கத்தாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க மருத்துவர் கொலையை கண்டித்து வெளிநோயாளிகள் பிரிவுக்கு பேரணியாக சென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேஜே மருத்துவமனை, சியோன் மருத்துவமனை, நாயர் மருத்துவமனை மற்றும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையிலும் போராட்டம் நடந்து வருகிறது.
கொல்கத்தா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, டெல்லி எய்ம்ஸ்-இல் தினசரி அறுவை சிகிச்சைகள் 80 சதவீதமும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மக்கள் சேர்வது 35 சதவீதமும் குறைந்துள்ளன.
கொல்கத்தா சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தடுப்பு நடவடிக்கையாக மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.