Independence Day 2021 | ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினவிழாவுக்கு தயாராகும் 23 ஆயிரம் பள்ளிகள்
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் 23 ஆயிரம் பள்ளிகளில் நாளை சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை கோலாலகமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக இயங்காமலே உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக கடந்த 10 நாட்களாக அங்குள்ள கல்வி நிலையங்கள் தயாராகி வருகின்றன.
இதற்காக அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் சட்ட விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் தேசிய கொடியேற்றப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சுற்றறிக்கையில், சுதந்திர தின விழா அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் முதன்மை கல்வி அலுவலர், பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கண்டிப்பாக தேசிய கொடியை ஏற்ற வேண்டும். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையும், தேசிய கொடி ஏற்றுவதையும் கூகுள் ட்ரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள 23 ஆயிரம் பள்ளிகளில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முற்படுவதும், அவர்களுடன் நமது ராணுவத்தினருக்கும் மோதல் போக்கு அவ்வப்போது நிலவி வருவதால் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைமுன்னிட்டு, கடந்த சில தினங்களாக அரசு அலுவலகங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல்வேறு இடங்களில் தேசிய கொடியின் நிறத்தில் மூவர்ண நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் வெடிமருந்துகள் அனுப்பியதை நமது ராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனால், இந்த முறை பாதுகாப்புகள் வழக்கத்திற்கு அதிகமாகவே போடப்பட்டுள்ளது.