நாராயண் ரானே கைது.. சுதந்திர வரலாற்றில் கைதாகும் மூன்றாவது அமைச்சர் இவர்.. முதல் இருவர் யார்?
இந்திய சுதந்திர வரலாற்றில், பதவியில் இருக்கும் போதே, மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட மூன்றாவது மத்திய அமைச்சராகவும், கடந்த 20 ஆண்டுகளில் முதல் மத்திய அமைச்சராகவும் நாராயண் ரானே பதிவாகிறார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து ஆட்சேபிக்கத்தக்க கருத்துகளைக் கூறியதாக மகாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு தெரியவில்லை என்பது அவமானகரமானது என்றும், ”அங்கு நான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் அறைந்திருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.
நாராயண் ரானே பேசியது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவ, சில சிவ சேனா தொண்டர்கள் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் சிவ சேனா தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாஷிக், அமராவதி முதலான மாவட்டங்களில் பாஜக அலுவலகமும் சிவ சேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளில், பதவியில் இருந்த போதே, மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதல் மத்திய அமைச்சராக நாராயண் ரானே வரலாற்றில் பதிவாகிறார். இந்திய சுதந்திர வரலாற்றில், பதவியில் இருந்த போதே, மாநில காவல்துறையால் கைது செய்யப்படும் மூன்றாவது மத்திய அமைச்சரும் இவர் தான். இதற்கு முன், மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன், தற்போதைய திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர், கடந்த 2001ஆம் ஆண்டு சென்னை காவல்துறையாக இரவோடு இரவாகக் கைது செய்தனர். மேம்பால ஊழல் வழக்கில், 12 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதானோருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. எனினும், கைது செய்யும் போது தாக்கப்பட்டதாக, அப்போதைய மத்திய தொழிற்துறை அமைச்சர் முரசொலி மாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டி.ஆர்.பாலுவும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட மறுநாள், அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னை வந்ததையடுத்து, இருவருக்கும் பிணை அளிக்கப்பட்டது.
தன் மீதான வழக்கு குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் நாராயண் ரானே முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். நள்ளிரவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இந்த வழக்கு அரசியல் பழிவாங்கலுக்காகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், காவல்துறை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
நாராயண் ரானேவின் கைது அரசியலமைப்புக்கு எதிரானது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது கருத்தை ட்விட்டரில் கூறியுள்ளார்.