Haryana Violence: மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை கிடையாது.. குருகிராமில் நீடிக்கும் பதற்றம்..
குருகிராம் பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு மசூதிக்கு வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருகிராம் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் நடப்பது என்ன?
ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள 2,500 பேர் கோயிலுக்கு சென்று, தஞ்சம் அடையும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. மேலும் மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் என்ற ஒருவர் உயிரிழந்தார்.
வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தல்:
கடந்த சில நாட்களாக, இந்த மத கலவரத்தில் பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கைமீறி சென்றிராத வகையில், இணையம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முடக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 141 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ,மேலும் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான பதற்றமான சூழ்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் பஜ்ரங் தள் அமைப்பினரும் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
#WATCH | Haryana administration removed illegal encroachments in Tauru of Nuh district yesterday pic.twitter.com/t6Do9ibIMg
— ANI (@ANI) August 4, 2023
இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை செய்வது வழக்கம். குறிப்பாக வெள்ளிகிழமைகளில் நடைபெறும் தொழுகைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் குருகிராமில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் இஸ்காமியர்கள் அனைவரும் நேற்று வீட்டில் இருந்தப்படியே தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நூஹ் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுமார் 250 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை:
இந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு. சிங், "தேசிய தலைநகர் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் வெளியிடப்படுவது கவலையளிக்கிறது" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், "அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியும். எங்கள் உத்தரவுப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.