Mumbai Oxygen Man : 22 லட்சம் மதிப்புள்ள காரை விற்று சுவாசம் வழங்கும் `ஆக்சிஜன் மனிதன்'
22 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை விற்று, மகாராஷ்ட்ராவில் இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில அரசுகளும், அமைச்சர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பல மாநிலங்களில் கொரோனா வார்டுகளில் அனுமதிப்பதற்கு போதிய படுக்கைகள் இல்லையென்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நாட்டிலே அதிகமான கொரோனா பாதிப்பு மகாராஷ்ட்ராவில்தான் உள்ளது. அந்த மாநிலத்தில் தினசரி 65 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த மாநில அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு சிகிச்சை படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவற்றை எல்லாம் அறிந்த மும்பையில் வசிக்கும் ஷாநாவாஸ் ஷேக் என்பவர், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதனால், இந்த பிரச்சினைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஷாநவாஸ் தான் மிகவும் ஆசையாக வாங்கிய ஆடம்பர சொகுசு காரான எஸ்.யு.வி. ஃபோர்டு காரையே விற்றுவிட்டார்.
22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த காரை விற்ற பணத்தைக்கொண்டு, அவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி, அதை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். இதன் காரணமாக, மகாராஷ்ட்ரா மக்கள் ஷாநவாஸை `ஆக்சிஜன் மனிதன்’ என்று அன்புடன் அழைக்கின்றனர். மொத்தம் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ள ஷாநவாஸ், இதை நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக தனி கட்டுப்பாட்டு குழுவையே அமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மகாராஷ்ட்ராவில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் ஷாநவாஸ் பொதுமக்களுக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்க்க துடிக்கும் வணிக நிறுவனங்களுக்கு மத்தியில், ஷாநவாஸின் செயல்களுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஷாநவாஸ், தனது நண்பரின் மனைவி, சிகிச்சையின்போது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்த நிகழ்வு தன் வாழ்வையே புரட்டிப்போட்டதாகவும், அதன் காரணமாகவே யாரும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் அவதிப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த உதவியை செய்வதாக ஷாநவாஸ் ஷேக் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.