Kalanidhi Veerasamy Letter: இதெல்லாம் எப்படி சாத்தியம்? அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? - மத்திக்கு பறந்த எம்.பி கடிதம்..
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் மாத செலவு மற்றும் ரஃபேல் வாட்ச் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில், ”14.04.2023 அன்று சென்னையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் தொடர்பாக உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைப் போன்ற சாமானிய பின்னணியில் இருந்து வந்தவர் எப்படி தேர்தல் அரசியலில் பண பலத்துடன் போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு மாதம் ரூ. 7 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவு இருப்பதாகவும் கட்சித் தலைவர் என்ற முறையில் தனது செலவுகளை நிர்வகிப்பதற்கு மாதம் ரூ.8 லட்சம், தனது நண்பர்கள் தான் உதவுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் அவர் இருக்கும் வீடு மற்றும் மூன்று உதவியாளருக்கு சம்பளம் என அனைத்தையும் நண்பர்கள் தான் உதவுகிறாரகள் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
மேலும் ஜூலை, 2021 முதல் நண்பர்களிடமிருந்து மாதம் 8 லட்சங்கள் அதாவது ரூ. 1,76,00,000/- இதுவரை பெறப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயார் செய்யப்பட்ட விலை உயர்ந்த ரஃபேல் வாட்ச் அணிந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 2021 இல் கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து 3 லட்சம் ரொக்கம் கொடுத்து வாங்கப்பட்டதாக கூறினார்.
பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லக்ஷ்மண் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு, டெஹல்கா.காம் "ஆபரேஷன் வெஸ்டெண்ட்" என்ற பெயரில் ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய போது ஊழலை அம்பலப்படுத்தியது. பங்காரு லக்ஷ்மன், பத்திரிகையாளரிடம் பணம் பெறுவது கேமராவில் சிக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்திய இராணுவத்திற்கு hand held thermal images வழங்குவதற்காக, பிரிட்டனை தளமாகக் கொண்ட M/s West End International நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக பங்காரு லக்ஷ்மன் பணத்தை பெற்றதாக கூறப்பட்டது. அது தொடர்பாக சிடிக்களை தெஹல்கா வெளியிட்டது. பின்னர் அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரே வித்தியாசம் என்னவென்றால் பங்காரு லக்ஷ்மன் எம்.பி.யாக இருந்தார், அண்ணாமலை இல்லை. எவ்வாறாயினும், ஆளும் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, பல எம்.பி.க்களுடன் தொடர்பு இருக்கும் நிலையில் அவரது இந்த அறிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரொக்கப் பரிவர்த்தனைகள் எப்போதும் வரித் துறைக்கு சவாலான ஒரு விஷயம் தான். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 269SS இன் கீழ், ஒருவர் கடன் வாங்கவோ அல்லது ரொக்கமாக ரூ.20,000க்கு மேல் செலுத்த முடியாது. எந்தவொரு விதிமீறலுக்கும் பிரிவு 271D இன் கீழ் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். வங்கிகள், அரசுத் துறைகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற சில நிறுவனங்களின் கடன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிறுவனங்களுடனான ரொக்கப் பரிவர்த்தனைகள் ரூ.20,000 வரம்பிற்கு இணங்க வேண்டும் அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
ராஜ்யசபாவில் டிசம்பர் 10 ஆம் தேதி, வரித் துறையில் 2019 ஆம் ஆண்டு இதுவரை ரூ. 6,692 கோடிக்கு 35,620 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரொக்க வழியில் ரூ.20,000 க்கும் அதிகமான டெபாசிட்கள் செய்ததாகக் கண்டறியப்பட்டது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அண்ணாமலை கூறியுள்ள பரிவர்த்தனைகளின் தன்மையை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறும், வருமான வரிச் சட்டம், 1961 இன் அடிப்படையில், 20,000 க்கு மேல் உள்ள எந்தவொரு பரிவர்த்தனையும் விசாரிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.