Uttar Pradesh: 4 மாதக் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கியெறிந்து கொன்ற குரங்குகள்! உபியில் கொடூரம்!
4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 மாதக் குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் தூக்கி எறிந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரங்குகள் அட்டூழியம்:
உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு நான்கு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது மூத்த மகனின் பிறந்த நாளன்று அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மாலை வீட்டில் மின் தடை ஏற்பட்டதால் வீட்டினுள் புழுக்கம் ஏற்பட்டதையடுத்து, காற்றுவாங்குவதற்காக குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். திடீரென்று குரங்குகள் கும்பலாக வர, அதில் இரண்டு குரங்குகள் அவரைத் தாக்கியுள்ளன. பின்னர் அவர் கையில் இருந்து குழந்தையைப் பறித்த குரங்குகள், அதைத் தூக்கிச் சென்று மாடியில் இருந்து தூக்கிப்போட்டுள்ளன. அப்போது குழந்தையை காப்பாற்றும் படி நிர்தேஷ் அலறியுள்ளார். கீழே சென்று பார்த்தபோது குழந்தை ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்வு தேவை:
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி சமீர் குமார் “இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்கள் இயல்பானவை அல்ல. இதனை நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இருந்து குரங்குகளை விரட்டியடிக்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. உள்ளூர்வாசிகளும் இதற்கு அனுமதி பெற்று குரங்குகளை விரட்ட எங்களுக்கு உதவலாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பும் பல சம்பவங்கள்:
இதுபோன்று குரங்குகள் குழந்தையை கொல்வது இது முதல்முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இதே பரேய்லியில் உள்ள பிச்புரி கிராமத்தில் 5வயது குழந்தையை குரங்குகள் பறித்துச் சென்றுள்ளன. குரங்குகளின் செயலால் குழந்தையின் தோல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற நிலையில், அதிக ரத்தம் வெளியேறியதால் அந்த குழந்தையும் உயிரிழந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான்பூரில் உடைந்திருந்த சுவற்றில் இருந்த செங்கற்களை குரங்குகள் தள்ளியதால் அந்த பெண் மற்றும் அவரது 4 குழந்தைகள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் குரங்கு தாக்குதல்:
குரங்குகள் சாதுவான விலங்காகக் கருதப்பட்டு வந்த நிலையில் அது கும்பலாக சேரும்போது ஆட்கொல்லிகளாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைக் கொல்வதும், காயப்படுத்துவதும், சாலையில் செல்வோரை விரட்டி தாக்குவதும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது.