Odisha New CM: ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் தேர்வு.. யார் இந்த மோகன் சரண் மாஜி?
ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மோகன் சரண் மாஜியை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைநகர் புவனேஷ்வரில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சட்டப்பேரவை குழு தலைவராக மோகன் மாஜியை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.
சர்ப்ரைஸ் கொடுத்த பாஜக: பாஜகவின் மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதோடு, ஒடிசாவுக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கனக் வர்தன் சிங் தியோவும் பிரவதி பரிதாவும் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாஜி, நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிர்த்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மோகன் சரண் மாஜி.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தர்மேந்திர பிரதானே முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் ஜுவல் ஓரமுக்கும் வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வந்தது.
ஒடிசாவுக்கு புதிய முதலமைச்சர்: ஆனால், எப்போதும் கணிப்புகள் அனைத்தையும் பாஜக தேசிய தலைமை பொய்யாக்கியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரை தொடர்ந்து ஒடிசாவிலும் பரிச்சயமில்லாத ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்து தேசிய தலைமை.
#WATCH | BJP MLA Mohan Charan Majhi to be the new CM of Odisha.
— ANI (@ANI) June 11, 2024
Kanak Vardhan Singh Deo and Pravati Parida to be the Deputy Chief Ministers. pic.twitter.com/QUpORT6Aeu
நவீன் பட்நாயக்கின் கோட்டையாக ஒடிசா மாநிலம் கருதப்பட்டது. கடந்த 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமே ஆங்கு ஆட்சியில் இருந்தது. நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.
தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்தாண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி தோல்வியை சந்தித்தது. ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது.
மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 51 இடங்களை மட்டுமே பிஜு ஜனதா தளம் கைப்பற்றியது. 14 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தொடர்ந்து பழங்குடி சமூகத்தை சேர்ந்த மற்றொருவரையும் உச்சபட்ச பதவிக்கு கொண்டு வந்துள்ளது பாஜக. பாஜக ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாயே முதலமைச்சராக உள்ளார்.