Amit Shah Assam Rally: அடுத்த முறையும் மோடிதான் பிரதமர்...300 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.. அமித்ஷா பேச்சு
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வென்ற பாஜக, 2014ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
சூடுபிடித்த அரசியல் களம்:
அதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது கர்நாடக தேர்தல். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதி கொண்டதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.
இதில், காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றியது. பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது.
அமித் ஷாவின் கணிப்பு:
இந்நிலையில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "2024இல் மக்களவை தேர்தலில் காங்கிரஸால் தற்போதைய எண்ணிக்கையை கூட எட்ட முடியாது" என்றார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறகணிக்க போவதாக அறிவித்துள்ளதை விமர்சித்துள்ள அமித் ஷா, "இந்த முடிவு அற்ப அரசியல் சூழ்ச்சியின் செயலாகும். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்து அரசியல் செய்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை எதிர்மறையானது. காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் மலிவான அரசியலுக்கு உதாரணம் காட்டுகிறார்கள்.
நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வழங்கி மோடியை பிரதமராக்கினர். மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்குகிறார்கள். அது காங்கிரஸின் விருப்பத்தை சார்ந்தது அல்ல. இதுதான் ஜனநாயகம். பிரதமர் மோடிக்கு மக்கள் ஆதரவை வழங்கினர். ஆனால், ஒன்பது ஆண்டுகளாக மக்களின் தீர்ப்பை ஏற்க காங்கிரசும் அதன் அரச குடும்பமும் தயாராக இல்லை" என்றார்.