அடடே... காலில் விழ முயற்சித்த பெண்... பதிலுக்கு காலில் விழுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளிய பிரதமர் மோடி..!
ஒரு பெண் தலைவர் மோடியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற முயன்றார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, அவரை தடுத்து நிறுத்தி, மோடியே அவரது பாதங்களை தொட்டு வணங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தாண்டு, பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. திரிபுரா, நாகாலாந்து, மேகலாயா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தபடியாக கர்நாடகாவுக்கு வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மேல்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. இந்தாண்டை தேர்தல் வெற்றியுடன் தொடங்கிய பாஜகவின் அடுத்த இலக்காக கர்நாடக உள்ளது.
எனவே, கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு நேற்று சென்றிருந்தார்.
கர்நாடகாவுக்கு சென்ற பிரதமர் மோடி:
அங்கு, பெங்களூர் – மைசூர் இடையிலான 118 கிலோ மீட்டர் புதிய அதி விரைவுச்சாலையையும் தார்வாத் ஐஐடி வளாகத்தையும் மோடி திறந்து வைத்தார். பின்னர், மாண்டியா அருகே கெஜ்ஜலகெரே கிராமத்தில் மோடியை சந்திக்க கர்நாடக பாஜக தலைவர்கள் காத்திருந்தனர்.
அப்போது, அவர் மேடைக்கு சென்றபோது, ஒரு பெண் தலைவர் மோடியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற முயன்றார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, அவரை தடுத்து நிறுத்தி, மோடியே அவரது பாதங்களை தொட்டு வணங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் அனுராதா கூறுகையில், "நான் கடவுளைப் பார்த்தது போல் உணர்ந்தேன். அவருடைய பாதங்களில் வணங்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் என்னை நிறுத்திவிட்டு, என் காலில் விழுந்து வணங்கினார்.
நான் அசௌகரியமாக உணர்ந்து அமர்ந்தேன். அவரைப் பார்க்கக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். மோடி பெண்களை மிகவும் மதிக்கிறார். அவர்களுக்கு பாஜகவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவரது வருகைக்குப் பிறகு, மண்டியா மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக அலை வீசுகிறது" என்றார்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரதமர்:
இதேபோல, தார்வாட்டில் ஐஐடி வளாகத்தின் திறப்பு விழாவின் போது, விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் சேத்தன் ராவ் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ரகு ஆகியோர் பிரதமரை வரவேற்க காத்திருந்தனர். மோடியைப் பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்ட சேத்தன் ராவ் அவரது காலில் விழுந்தார. இதை தொடர்ந்து, மோடியும் சேத்தனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
இதுகுறித்து ரகு கூறுகையில், "நாங்கள் மோடியை சந்திக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அவர் என்னை வாழ்த்திய பிறகு, என் அருகில் நின்றிருந்த விஎச்பி நிர்வாகி உணர்ச்சிவசப்பட்டார்.
நாங்களும் மோடியைப் பார்த்து உற்சாகமடைந்தோம். நாங்கள் அவரை கைகூப்பி வரவேற்றபோது, பிரதமர் மோடி நிராகரித்த போதும், சேத்தன் ராவ் மோடியின் காலில் விழுந்தார். ஆனால், பதிலுக்கு, பிரதமரும் அவரது காலில் வணங்கினார்" என்றார்.