”மலம் அள்ளும் பணி காரணமாக யாரும் இறக்கவில்லை” : சமூக நீதி அமைச்சகம் அளித்த அதிர்ச்சி பதில்..
`மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை’ என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை.
`மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை’ என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை. எனினும், சாக்கடை, கழிவு நீர்த் தொட்டி முதலானவற்றைக் கழுவும் போது எழுந்த நச்சு வாயு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 321 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை மீது கேள்வி எழுப்பினார்.
தனது கேள்வியில் அவர், `கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 500 பேர் மலம் அள்ளும் பணியின் காரணமாக உயிரிழந்திருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியென்றால், அதுகுறித்த விவரங்கள் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக அதனைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்ய மனிதர்களையே நியமிப்பவர்கள் மீது தண்டனை அளிக்கும் விதமாக, சட்டத்தைக் கடுமையாக்கும் எண்ணம் உள்ளதா? அப்படியென்றால் அதன் விவரங்கள் என்ன?’ என்று கேட்டுள்ளார்.
How in a modern world we still refuse to take clear steps to protect our brothers from the inhumane conditions. See the question and shocking to see the answer from Sangi Sarkar. pic.twitter.com/yJ9YAYaSOt
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) December 7, 2021
இந்தக் கேள்விகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் அதன் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர், `கடந்த 5 ஆண்டுகளாக மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. எனினும், சாக்கடை, கழிவு நீர்த் தொட்டி முதலானவற்றைக் கழுவும் போது எழுந்த நச்சு வாயு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 321 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று மத்திய சமூக நீதித் துறை சார்பாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மலம் அள்ளும் தொழிலாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் கடன் வழங்கப்படுவதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்காக நவீன இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், பொறியியலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி ஆகியவை வழங்கப்படுவதாகவும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.