National medical commission: மருத்துவ மாணவர்கள் இனி மகரிஷி சாரகா உறுதிமொழி ஏற்க வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையம்
திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் உறுதிமொழியை நிறைவேற்றுவேன். நான் எனது சக்திக்கு உட்பட்டு, எந்தத் தீங்கும் செய்யாமல், நியாமான வகையில் நோயாளிகளைக் காத்து நிற்பேன் - ஹிப்போக்ரட்ஸ்
இந்தியாவில் மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழிக்குப் (Hippocratic oath) பதிலாக, மகரிஷி சாரகா சபதம் எடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகள் நிர்வாகத்திடம் தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாலோசனை கூட்டம் நடத்தியது. இதில், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய முடிவுகள் குறித்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
இதில், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 2022, பிப்ரவரி 14ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் படிப்புகளுக்கு (White- Coat Ceremony) முன்பாக எடுக்கப்படும் ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழிக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மகரிஷி சாரகா சபதம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.மு 400களில் கிரேக் நாட்டில் வாழ்ந்த ஹிப்போக்ரட்ஸ் மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். மருத்துவத்தையும் தத்துவத்தையும் பிரித்துக் காட்டிய முதல் சிந்தனையாளர் ஹிப்பாக்ரடீஸ் என்று கூறுவதுண்டு. சமயம், மூடநம்பிக்கை, தத்துவம் என்பதில் இருந்து மருத்துவத்தை விடுவித்து மருத்துவத்தை சுயாதின அறிவயல் பாதைக்குக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. நோய்களும், நோய்த் தடுப்பு முறைகளும் சில இயற்கை விதிகளுக்கு உட்பட்டது என்பதைக் கண்டறிந்தார். மேலும், மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளையும் (Code of Conduct) ஏற்படுத்தினார்.
இவரின் அரிய மருத்துவக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக உலகின் பல நாடுகளில், மருத்துவப் படிப்பைத் தொடங்கும் போதும், பட்டம் பெறுவதற்கு முன்பதாகவும் ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழி பின்வருமாறு:
"நோய்த் தீர்க்கும் அப்பல்லோ, அஸ்கிலிபியஸ், ஹைஜியா, பனேசியா உள்ளிட்ட அனைத்து உடல்நலக் கடவுள்கள் மீது சத்தியம் செய்கிறேன். இவர்களை ஆதாரமாக கொண்டு திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் உறுதிமொழியை நிறைவேற்றுவேன். நான் எனது சக்திக்கு உட்பட்டு, எந்தத் தீங்கும் செய்யாமல், நியாமான வகையில் நோயாளிகளைக் காத்து நிற்பேன்".
சாரகா:
இந்தியாவில் புராதன காலத்தில் வாழ்ந்தவர மகரிஷி சாரகா. தற்போதைய பஞ்சாபின் கபூர்தலாவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. சாரகா தமது "சாரகா சம்ஹித" என்ற நூலில் எவ்வாறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அல்லது சேர்க்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். அவர் கூற்றின்படி அறிவுத்திறன், சேவை மனப்பான்மை, தெளிவான மனம் மற்றும் நலமான உடல் ஆகியவை ஒரு மருத்துவரின் தகுதிகளாகும். நோயாளிகளை கவனிப்பவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாகவும், உண்மையானவர்களாகவும், நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
மேற்கத்திய கலாச்சார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, எளிய மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் உறுதி மொழி மாற்றியமைக்கப்படுகிறதா? இல்லை நவீன மருத்துவ முறையில் வலுக்கட்டாயமாக ஆயுர்வேதம் திணிக்கப்படுகிறதா? என்ற கோணத்தில் மருத்துவர்கள் இந்த சுற்றறிக்கையை விவாதித்து வருகின்றனர்.