Tripura: திரிபுரா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற மாணிக் சாஹா..! பிரதமர், முதல்வர்கள் பங்கேற்பு..!
திரிபுரா முதலமைச்சராக மாணிக் சாஹா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவர் மட்டும் இன்றி, எட்டு பிற அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதியும் நடைபெற்றது. அதற்கான முடிவுகள், மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மூன்று மாநிலங்களிலும், பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது.
ஆட்சியை தக்க வைத்த பாஜக:
திரிபுராவை பொறுத்தவரையில், பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைத்துள்ளது. 60 சட்டப்பேரவை இடங்கள் கொண்ட அம்மாநிலத்தில் 32 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது பாஜக.
இதற்கிடையே, திரிபுராவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மாணிக் சாஹா. நேற்று முன்தினம் நடைபெற்ற திரிபுரா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், மாணிக் சாஹா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எட்டு பேருக்கு அமைச்சர் பதவி:
இந்நிலையில், திரிபுரா முதலமைச்சராக மாணிக் சாஹா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவர் மட்டுமின்றி, எட்டு பிற அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்று கொண்டார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணியாக உள்ள அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காந்த், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், சிக்கிம் முதலமைச்சர் பெர்ஸ் தமாங், திரிபுரா முன்னாள் முதலமைச்சர் விப்லப் தேவ் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சரவை:
புதிய அமைச்சர்களில் நான்கு பேர் கடந்த அரசாங்கத்தில் இருந்து தக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்க ராய், சாந்தனா சக்மா மற்றும் சுஷாந்தா சவுத்ரி. விப்லப் தேவின் நெருங்கிய விசுவாசியான டிங்கு ராய், பாஜகவின் பழங்குடியினர் மோர்ச்சா தலைவரான பிகாஷ் தேபர்மா மற்றும் சுதன்ஷு தாஸ் ஆகிய மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த சுக்லா சரண் ஜெட்டியா அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
மாணிக் சாஹா vs பிரதிமா பவுமிக்:
முன்னதாக, முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. முதலமைச்சரான மாணிக் சாஹா, மத்திய இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் ஆகியோருக்கு இடையே முதலமைச்சர் பதவி பெறுவதில் போட்டி நிலவி வந்ததாக தகவல் வெளியானது.
திரிபுரா, ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டது. பிரதான எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடிவுகளிலும் எதிரொலித்தது.