Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்
டெல்லியில் செல்லப்பிராணியை விட்டு பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சுவரூப் நகரை சேர்ந்தவர் ரியா தேவி, அவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர் தனது செல்லப்பிராணியான பிட்புல் வகை நாயை வளர்த்து வருகிறார். அவரது நாய் ரியா தேவியின் வீட்டில் தொடர்ந்து மலம் கழித்து வந்துள்ளது. அப்போது ரியா தேவி தனது வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்துள்ளார்.
பெண்ணை கடித்து குதறிய பிட்புல் நாய்:
அப்போது அந்த நபர் அவரது நாயை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரியா தேவி அந்த நபரின் வீட்டின் முன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை அவரது நாயை கட்டிவைக்கும்படி கேட்டுகொண்ட நிலையில் மீண்டும் மீண்டும் அந்த நபர் தனது செல்லப்பிராணியை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அந்த நபர் ரியா தேவியை அச்சுறுத்த தனது நாயை மீண்டும் அவிழ்த்து விட்டுள்ளார். ஆனால் அந்த நாய் ரியா தேவியை 5 முறை கடித்துள்ளது. நாய் கடியை தாங்க முடியாமல் ரியா தேவி அலறி சத்தமிட்டுள்ளார். அப்போது அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் அந்த நாயை அப்புறப்படுத்தி ரியா தேவியை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் ரியா தேவி வீட்டின் வெளியே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
காவல்துறை விசாரணை:
ரியா தேவி அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ அந்த நபர் அனைவரிடமும் சண்டை போடும் குணம் கொண்டவர், அவர் தனது நாயை கட்டி வைக்காமல் இருப்பதால அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவரும் அந்த நாய்க்கு பயந்து வெளியே கூட வரமுடியாமல் இருந்து வருகினறனர்” என ரியா தேட்வி குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரியா தேவி சுவரூப் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.