Pet Dog and CCTV : திருடப்பட்ட செல்ல நாய்.. கைகொடுத்த சிசிடிவி.. போலீஸார் செய்த அதிரி புதிரி காரியம் என்ன தெரியுமா?
பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நாயை காவல்துறை மீட்ட சம்பவம் அனைவரின் மனதையும் வென்றுள்ளது.
நண்பனாக இருக்கும் நாய்:
மனிதர்களின் முக்கிய செல்லப்பிராணியாக இருப்பது நாய். செல்லப்பிராணிக்கும் மேலாக சக நண்பராக நாயை பாவிக்கும் போக்கும் இருந்து வருகிது. நாயுக்கும் மனிதருக்கும் இடையேயான பிணைப்பு முற்றிலும் அன்பால் ஆனது.
தற்போது, பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நாயை காவல்துறை மீட்ட சம்பவம் அனைவரின் மனதையும் வென்றுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்காவில் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. சிசிடிவி காட்சியின் உதவியோடு நாயை மீட்டுள்ளனர் போலீஸ்.
சிசிடிவி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாய்:
வெளியான சிசிடிவியில், கறுப்பு உடையில் வந்த ஒரு நபர் நாயை பின்தொடர்ந்து சென்று, தான் கொண்டு வந்த பையில் அந்த நாயை திருடி சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் நாயைக் கண்டுபிடித்து தருவோம் என்று போலீஸார் உறுதியளித்தனர்.
150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பின்னர், போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு தேடி பிடித்துள்ளனர். பின்னர், குற்றவாளியை நவாடாவில் இருந்து கைது செய்தனர் டெல்லி காவல்துறை. உறுதியளித்தபடி அந்த பெண்ணிடம் அந்த நாயை போலீசார் ஒப்படைத்தனர்.
திருடப்பட்ட நாய் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அந்த பெண்ணுடன் அது விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பெண், "என் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு முயற்சி செய்ததற்காக அவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
24 மணி நேரத்திற்குள் எனது செல்லப்பிராணியை மீட்டுத் தருவதாக போலீஸார் என்னிடம் உறுதியளித்தனர். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், கேரளா நெட்டூரில் பெட்டிக் கடையின் உரிமையாளரின் நாய்க்குட்டி திருடப்பட்டது. ஆனால், திருடுபோன தனது செல்லப்பிராணியை கண்டுபிடிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கு முன்பும் அவரது கடையில் இருந்து செல்லப்பிராணிகள் காணாமல் போயுள்ளது.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவை திரும்ப வந்துள்ளது. எனவே, ஒரு பெண்ணும் ஆணும் கடையில் இருந்து திருடிச் சென்ற நாய்க்குட்டி மீண்டும் தன்னிடம் திரும்பி விடும் என்று கடை உரிமையாளர் பாசித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள Shih Tzu இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டியை ஆணும் பெண்ணும் திருடிச் சென்றனர். பைக்கில் கடைக்கு வந்த அவர்கள், ஊழியர்களின் கவனத்தை சிதறடித்தபோது நாய்க்குட்டியை ஹெல்மெட்டில் மறைத்து திருடிச் சென்றனர்.
மற்றொரு வாடிக்கையாளர் நாய்க்குட்டியை வாங்க கடைக்கு வந்தபோதுதான், செல்லப்பிராணி திருடப்பட்டதை கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நாய்க்குட்டியை வாலிபர் திருடிச்சென்றது தெரியவந்தது.