பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்..
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் காப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நாளை 2-ஆம் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன், தேசிய மாநாட்டுக் கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு இந்தக் கடிதத்தை மம்தா அனுப்பியிருக்கிறார்.
15 தலைவர்களுக்கு அனுப்பியுள்ள முழு நீள கடிதத்தில் ஒரு பகுதியாக, “மத்திய-மாநில அரசுகளின் உறவுகள், மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மத்திய அரசு ஆகியவற்றின் உறவுகள் வரலாற்றில் இதைவிட மோசமாக சென்றதில்லை. தனிமைப்படுத்தப்பட்டதுபோல் உணர்கிறார்கள். இவை அனைத்துக்கும் பிரதமரின் சர்வாதிகாரப்போக்குதான் காரணம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.