(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee Birthday: மம்தா பானர்ஜி : இந்தியாவின் இரும்புப் பெண்மணி...! மேற்கு வங்க சிங்கத்தின் பிறந்தநாள் இன்று..
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய சமூகத்தில் படித்து பட்டம் பெற்று பல்வேறு உயரங்களைத் தொட்ட பெண்கள் லட்சம் பேர் இருப்பார்கள்.
இந்தியாவின் மக்கள் தொகையான சுமார் 138 கோடி பேரில் சுமார் 66 கோடி பேர் பெண்கள் என்கிறது புள்ளி விவரங்கள். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி பேர் பெண்கள். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய சமூகத்தில் படித்து பட்டம் பெற்று பல்வேறு உயரங்களைத் தொட்ட பெண்கள் லட்சம் பேர் இருப்பார்கள். ஆனால், பெண்களால் எளிதில் நெருங்க முடியாத ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அரசியல் தான்.
இந்திய பிரதமர்கள் பட்டியலில் பார்த்தால் சுதந்திர இந்தியாவில் இந்திராகாந்திக்குப் பின் வேறு எந்த பெண்ணாலும் பிரதமராக முடியவில்லை. மாநில முதலமைச்சர்களாக தேசியக் கட்சிகளின் ஆண் தலைமைகளால் முடிவு செய்யப்பட்டவர்கள் தான் முதலமைச்சர்களாகியிருக்கின்றனர். தனியே போராடி அதிகாரத்தை கைப்பற்றியதோடு அரசியலில் நிலைத்து நின்றவர்கள் வெகு சிலர்தான். அவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் ஜெயலலிதா. மற்றொருவர் மம்தா பானர்ஜி.
ஜெயலலிதாவிற்காவது எம்ஜிஆர் உருவாக்கிக் கொடுத்த அதிமுக என்ற கட்சி இருந்தது. ஆனால், மம்தா தனியொரு ஆளாக உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் அசாத்தியமானது. கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் ஜனவரி 5, 1955 ஆம் ஆண்டு ப்ரோமைலேஸ்வர் பானர்ஜி, காயத்ரி தேவி தம்பதியருக்கு பிறந்தவர்தான் மம்தா பானர்ஜி. கொல்கத்தாவில் உள்ள ஜோகமயா தேவி கல்லூரியில் வரலாறும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்களின் வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டமும். ஜோகேஷ் சந்திரா சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜியின் தந்தை சுதந்திரப்போராட்ட வீரர் என்பதால் இயல்பிலேயே மம்தாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மீது ஆர்வம் இருந்தது. 1970ல் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அவர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டபோது அவருக்கு வயது 15 தான். மம்தா பானர்ஜி தைரியமான ஆள். யாரையும் எதிர்க்கும் துணிவும் ,போராட்ட குணமும் அவருக்கு இருந்தது. சுதந்திரப்போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் காந்தி காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தார். அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது காங்கிரஸ். அப்படி ஒரு போராட்டத்தின் போது ஜெயப்பிரகாஷ் காந்தியின் கார் மீது ஏறி ஆட அனைவரது கவனத்தையும் பெற்றார் மம்தா பானர்ஜி.
ஊடக வெளிச்சம் மம்தா மீது பாய மேற்கு வங்கத்தில் பிரபலமானார் மம்தா. காங்கிரஸின் இளைஞர் பிரிவான மகிளா காங்கிரஸில் பொதுச்செயலாளர் ஆனார். 4 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார் மம்தா. அதன்பிறகு 1984ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் வென்று இளம் நாடாளுமன்ற உறுப்பினரானார் மம்தா. அவர் எதிர்த்து போட்டியிட்டது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் அரசியல்வாதி சோம்நாத் சாட்டர்ஜியை தான்.
மேற்குவங்க மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து, அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் மம்தா. 1989ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது மக்களுக்கு ஏற்பட்டிருந்த காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் தோல்வியடைந்தார். ஆனால் அதன்பின்னர் 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் தெற்கு கல்கத்தா தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டு அரசிலும் ரயில்வே துறையின் அமைச்சராகவும், எரிசக்தித்துறை அமைச்சராகவும் இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் மம்தா. மம்தாவின் பொறுப்பின் கீழ் இருந்தபோது ரயில்வே துறை மிகப்பெரும் வளர்ச்சியை கண்டது.
மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாராலும் அசைக்க முடியாத கட்சியாக விளங்கியது. 1977ல் மேற்குவங்கத்தை கைப்பற்றிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரஸாலேயே நகர்த்த முடியவில்லை. ஆனால், 1992ல் கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் பில்டிங்கில் சபதம் எடுத்தபடியே செய்து காட்டினார் மம்தா பானர்ஜி. 1992ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று கூறி ஃபெலானி பசக் என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்பதற்காக மேற்குவங்க சட்டப்பேரவையான ரைட்டர்ஸ் பில்டிங்கிற்குச் சென்றார் மம்தா பானர்ஜி. அங்கு காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட, இந்த கட்டிடத்திற்கு இனி வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன் என்று சபதமேற்றார் மம்தா பானர்ஜி.
மம்தாவிற்கும், மேற்குவங்க காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் 1996களில் அப்பட்டமாக வெடித்தது. காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்ட்டுகளின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். 1997ல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மம்தா பானர்ஜி அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 7 தொகுதிகளில் வெற்றிபெற்றது திரிணாமுல் காங்கிரஸ். வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஆள் மம்தா தான்.
2006 தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த பாதி இடங்களுக்கு மேல் போனது. உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் தோல்வி. இதனால் அக்கூட்டணியில் இருந்து விலகினார் மம்தா. 2006 ,2007 காலகட்டங்களில் நடைபெற்ற சிங்கூர் போராட்டம், நந்திகிராம் கலவரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் மம்தா. எந்த காங்கிரஸை எதிர்த்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை ஆரம்பித்தாரோ அதே காங்கிரஸுடன் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து ரயில்வே அமைச்சரானார்.
2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணியுடன் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியை வீழ்த்தினார் மம்தா பானர்ஜி. 184 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி. காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளுடன் சேர்ந்து 227 இடங்களைக் கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ். அன்று தொடங்கியது மம்தாவின் சகாப்தம். இப்போதும் மேற்குவங்கத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் மம்தா. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசியபோது வீழாத சில மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இப்போது வரை அங்கே காலூன்ற மொத்த பலத்தையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது பாஜக. ஆனால், தீதீ என்னும் பெருஞ்சுவரை உடைக்க போதிய வலு அங்கே இன்னும் உருவாகவில்லை. அதனால் தான் 3வது முறையாக சொல்லிவைத்து அடிக்க முடிந்திருக்கிறது மம்தாவால்.
மம்தாவை மேற்கு வங்க ஜெயலலிதா என்று விமர்சகர்கள் கூறுவதுண்டு. அவரைப்போலவே இப்போது, பிரதமராகும் ஆசை வந்திருக்கிறது போல மம்தாவிற்கு. காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மம்தா. தான் 26 ஆண்டுகாலம் இருந்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார். இந்தியாவின் பிரதமராகவே இருந்தாலும் கூட மோடியுடன் மல்லுக்கட்டுவதிலேயே தன்னை ஆளுமையாக நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறார் மம்தா. பாஜகவை எதிர்த்துவிட்டு, பாஜகவின் சாஃப்ட் வெர்ஷனாகவே இருக்கிறார் மம்தா என்ற விமர்சனமும் அவர்மீது வைக்கப்படுகிறது. தன்னை ஒரு பிராமின் என்று சொல்லிதான் வாக்கே சேகரிக்கிறார். தேர்தலில் 50 பெண்களை வேட்பாளராக நிறுத்துவது, அதிரடி அரசியலில் நம்பிக்கை என்று ஜெயலலிதாவின் பல்வேறு குணங்களோடு மம்தாவின் குணங்களும் ஒத்துப்போகிறது.
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. அவர் பிரதமராவாரா? இல்லை கிங் மேக்கர் ஆவாரா? என்பதை காலம் முடிவு செய்யும்