விதவைகளுக்கு தாலி கழற்றும் சடங்கு இனியும் இல்ல.. இது பெரிய புரட்சி
விதவைகளுக்கு தாலி மற்றும் மெட்டியை கழற்றும் சடங்கினை நடத்தக் கூடாது என கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கும் சடங்கினையும் வளையல்களை உடைக்கும் சடங்கினையும் நடத்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு நடத்தப்படும் மோசமான சடங்குகள், சம்பிரதாயங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. விதவைகளுக்கு தாலி மற்றும் மெட்டியை கழற்றும் சடங்கினை நடத்தக் கூடாது என கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கும் சடங்கினையும் வளையல்களை உடைக்கும் சடங்கினையும் நடத்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிராமங்களில் சமூக மாற்றம்:
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்கள் மாறி வருகின்றன. சமூக மாற்றத்தின் அடுத்தக்கட்டமாக கணவனை இழந்த பெண்களுக்கு நடத்தப்படும் மோசமான சடங்குகள், சம்பிரதாயங்களை இனியும் செய்யப்போவதில்லை என 7,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் அறிவித்துள்ளன.
கைம்பெண்களுக்கு பாகுபாடு காட்டும் வகையிலான பழக்கவழக்கங்களுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் பிரமோத் ஜிஞ்சாடே இதுகுறித்து கூறுகையில், "மகாராஷ்டிராவில் உள்ள 27,000 கிராம பஞ்சாயத்துகளில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளை நடத்தி, விதவைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பழக்கவழக்கங்களுக்கு தடை விதித்ததாக அறிவித்துள்ளன.
பெண்கள் கண்ணியமாக வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில், 2022 ஆம் ஆண்டில் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வாட் என்ற கிராமம், நாட்டின் முதல் கிராமமாக விதவைகளுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களைத் தடை செய்தது.
விதவைகளின் சடங்குகளை நடத்தக் கூடாது!
கடந்த 2022ஆம் ஆண்டு, மே 4ஆம் தேதி, விதவையின் தாலி மற்றும் மெட்டியினை அகற்றுவதையும், குங்குமத்தை அழிப்பதையும் அவரது வளையல்களை உடைப்பதையும் தடை செய்யும் தீர்மானத்தை ஹெர்வாட் கிராமம் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த சமூக மாற்றம் மற்ற கிராமங்களுக்கு வேகமாக பரவியது.
ஹெர்வாட் கிராமத்தினை பின்பற்றி, கடந்த சில ஆண்டுகளாக, பல கிராமங்களில் நடக்கும் கணபதி பூஜைகள், ஹால்டி-குங்கும திருவிழா மற்றும் கொடியேற்ற விழாக்களில் விதவைகளை பங்கேற்று வருகின்றனர்" என்றார்.
நாட்டில் கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கணக்கில் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது. கைம்பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டது.
இந்த சமூக மாற்றம் குறித்து ஹெர்வாட்டின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுர்கொண்டா பாட்டீல் கூறுகையில், "வளையல்களை உடைத்து, தாலி மற்றும் மெட்டியை அகற்றும் வழக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. முன்னதாக, இந்த பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட்டதா என்பதை சரிபார்க்க இறப்புகள் ஏற்பட்ட வீடுகளுக்கு நாங்கள் செல்வோம். ஆனால், இப்போது, மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர்" என்றார்.




















