"இந்திரா காந்தியே சொர்க்கத்தில் இருந்து வந்தாலும் அது மட்டும் நடக்காது" அமித் ஷா அதிரடி!
இந்திரா காந்தியே சொர்க்கத்தில் இருந்து வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திருப்பி அளிக்கப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே சொர்க்கத்தில் இருந்து வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திருப்பி அளிக்கப்படாது என மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தல்:
அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், வடக்கு மகாராஷ்டிராவின் துலே நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பேசினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே சொர்க்கத்தில் இருந்து வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திருப்பி அளிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பாஜக தலைமையிலான மத்திய அரசால் 2019இல் நீக்கப்பட்ட 370வது சட்டப்பிரிவு, எந்தச் சூழ்நிலையிலும் திருப்பி கொண்டு வரப்படாது. இந்திரா காந்தியே சொர்க்கத்திலிருந்து திரும்பினாலும், 370ஆவது சட்டப்பிரிவு திருப்பி கொண்டு வரப்படாது" என்றார்.
அமித் ஷா பேசியது என்ன?
இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், "சில நாட்களுக்கு முன்பு, உலமாக்கள் (முஸ்லீம் அறிஞர்கள்) காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து, முஸ்லிம்களுக்கு (வேலை மற்றும் கல்வியில்) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC/ST/OBCகளுக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட வேண்டும். ராகுல் (காந்தி) நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நான்கு தலைமுறைகள் வந்தாலும், அவர்களால் SC/ST/OBCகளுக்கான இட ஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்றார்.
ராகுல் காந்தி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், "அரசியல் சட்டத்தின் நகலை ராகுல் காந்தி காட்டுகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் அம்பலப்படுத்தப்பட்டார். அவர் காட்டிய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை ஒருவர் வாங்கி பார்த்திருக்கிறார். அதில், நகலின் அட்டையில் மட்டும் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டிருந்தது. மற்றபடி, வேறு எதுவும் அதில் எழுதப்படவில்லை" என்றார்.