Maan Ki Baat : ”ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும்" - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...!
ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Maan Ki Baat : ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி தொடக்கப்பட்டது. இதன் பின், அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி.
இந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் பிரதமர் மோடி. அதன்படி, இன்றைக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதாகல் இந்த வாரமே மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது.
"மழை நீரை சேகரிக்க வேண்டும்"
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ”பிபர்ஜாய் புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள கட்ச் மாவட்டம் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும். இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீள முடியும். தற்போது பருவமழை பல்வேறு இடங்களில் தொடங்கிய சூழலில், ஒவ்வொரு துளி மழை நீரையும் நாம் சேகரிக்க வேண்டும். நிர்வாகம் என்று வந்தால் நான் சத்ரபதி சிவாஜியை நினைவில் கொள்வேன். அவரிடம் ஏராளமான நிர்வாக திறன்களை கற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கடற்படை ஆகிவற்றில் அவரது பணியை இந்திய வரலாற்றில் இன்று வரை கொண்டாடப்படுகிறது” என்றார். மேலும், ”நூறு வருடங்களுக்கு முன்பாக சத்ரபதி சிவாஜி கட்டிய கோட்டைகள் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. பேரிடர் மேலாண்மை பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு பெரும் எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறது" என்றார்.
"காசா நோய் - பணிகள் தீவிரம்”
”வரும் 2025ம் ஆண்டிற்குள் காசா நோயை முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவருக்கு காசா நோய் இருந்தால் அவர்களது குடும்பமே அவர்களை விட்டு தள்ளி இருக்கும் நிலை இருந்தது. தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.
அதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை இளைஞர்கள் சிலர் செய்து வருகின்றனர். கிட்டதட்ட 50 ஆயிரம் இளைஞர்கள் காசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இதுபோன்று காசநோயை ஒழிப்பதற்கு இளைஞர்கள் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
"ஒரு குடும்பம் ஒரு உலகம்"
தொடர்ந்து பேசிய அவர், "ஜூன் 21ஆம் தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை ’ஒரு உலகம் ஒரு குடும்பம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் யோகா தினம் கொண்டாட்டப்படுகிறது. நாடு முழுவதும் அன்றைய தினம் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நான் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள யோகா தினத்தில் நான் பங்கேற்கிறேன்.
சமூக ஊடங்களில் இதை பற்றிய மிகப்பெரிய ஆர்வத்தை பார்க்கிறேன். யோகாவை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.