கேரள லாட்டரி விற்பனையாளர்கள் அதிர்ச்சி! GST உயர்வால் டிக்கெட் விலை உயருமா? அரசின் அதிரடி திட்டம் என்ன?
லாட்டரி சீட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளதால், கேரளாவில் இரண்டு லட்சம் லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் செப்டம்பர் 22, 2025 (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வந்ததால், லாட்டரி சீட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளதால், கேரளாவில் இரண்டு லட்சம் லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் லாட்டரி விலை உயர்த்தப்படுமா? என்ற கேள்வியும் லாட்டரி பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், லாட்டரி சீட்டுகளின் விலை உயர்த்தப்படுமா?, கடைசியாக லாட்டரி சீட்டுகளின் விலை எப்பொழுது உயர்த்தப்பட்டது?, லாட்டரி சீட்டுகளின் பரிசுத் தொகைகளில் மாற்றம் செய்யப்படுமா?, கேரள அரசின் திட்டம் என்ன? போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக - கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். கேரளா பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பரிசுகளை அள்ளியுள்ளனர். தற்போது கேரள லாட்டரி டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதால், லாட்டரி சீட்டுகளின் விலை உயர்த்தப்படுமா? என்ற கேள்வி லாட்டரி பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கேரளா லாட்டரி டிக்கெட் விலையை கேரள அரசு உயர்த்தியது. அதாவது 40 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதத்தின் கீழ் கேரளா லாட்டரி கொண்டு வரப்பட்டு இருப்பதால், மீண்டும் கேரள லாட்டரி டிக்கெட் விலையை உயருமா? என லாட்டரி விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர். ஜிஎஸ்டி உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் உட்பட லாட்டரி விற்பனையாளர்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா லாட்டரி சீட்டுகளின் விலை உயர்வு விற்பனையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையைக் கருத்தில் கொண்டு, டிக்கெட்டுகளுக்கான கமிஷன்களில் ஜிஎஸ்டி உயர்வை சரிசெய்ய மாநில லாட்டரித் துறை திட்டமிட்டுள்ளது.
கேரளா லாட்டரி டிக்கெட்டுகளின் விலையை மீண்டும் உயர்த்தினால் கேரள லாட்டரி டிக்கெட் விற்பனையை கடுமையாக பாதிக்கக்கூடும். இதனால் டிக்கெட் விலை உயர்த்தப்படாது என்று கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் லாட்டரி சீட்டுகளுக்கான ஜிஎஸ்டியை அதிகரிப்பது குறித்து கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் கூறுகையில், லாட்டரிகளுக்கான வரியை நிர்ணயிக்கும் அதிகாரங்களை மாநிலத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். தினசரி லாட்டரி சீட்டுகளின் விலை ரூ.50 என்றாலும், பம்பர் சீட்டுகளின் விலை ரூ.500 வரை இருக்கும். செப்டம்பர் 27 ஆம் தேதி குலுக்கல் நடைபெறவிருந்ததால், மிகவும் பிரபலமான ஓணம் பம்பர் டிக்கெட் விற்பனை உச்சத்தில் இருந்தபோது ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த டிக்கெட்டின் முதல பரிசு ரூ.25 கோடி ஆகும். மேலும் திங்கள்கிழமை (செப்டம்பர் 22) வரை சுமார் 74 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சுமார் ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி மொத்த வருவாயும், ரூ.1,000 கோடிக்கு மேல் லாபமும் கொண்ட கேரள அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் லாட்டரி ஒன்றாகும்.






















