(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Election Date: வேட்பு மனுத்தாக்கல் முதல் முடிவுகள் வரை.. தமிழ்நாடு மக்களவை தேர்தல் தேதி முழு விவரம்!
Tamil Nadu Election Date: தமிழ்நாடு மக்களவை தேர்தல் தேதி தொடர்பான விவரங்களை கீழே தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Election Date: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்களவை தேர்தல் விவரம்:
அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் எப்போது தொடங்குகிறது, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை, வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் எப்போது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
- வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்: மார்ச் 20ஆம் தேதி
- வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்: மார்ச் 27ஆம் தேதி
- வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28ஆம் தேதி
- வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30ஆம் தேதி
- வாக்குப்பதிவு: ஏப்ரல் 19ஆம் தேதி
- வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: ஜூன் 4ஆம் தேதி
ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல்:
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 கட்டங்களாகவும் அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் 2 கட்டங்களாகவும், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, குஜராத்துக்கு ஒரே கட்ட தேர்தல்:
வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. மே மாதம் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் மே மாதம் 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் மே மாதம் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
6ஆம் கட்ட மக்களவை தேர்தல் மே மாதம் 25ஆம் தேதியும் கடைசி கட்டமான 7ஆம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டத்தில் அதிகபட்சமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டத்தில் 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்டத்தில் 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்டத்தில் 49 தொகுதிகளுக்கும் 6 மற்றும் 7ஆம் கட்டத்தில் தலா 57 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.