(Source: ECI/ABP News/ABP Majha)
Rajya Sabha: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலிக்கும் மணிப்பூர் விவகாரம்..எதிர்க்கட்சியினர் கடும் அமளி..மாநிலங்களவை முடக்கம்
ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது.
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, 800 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர்.
ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிப்பூர் விவகாரம்:
ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக இந்தியா (எதிர்க்கட்சிகள் கூட்டணி) கூட்டணி சார்பில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இது, ஏற்று கொள்ளப்பட்டாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்பது அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக விவாதத்திற்கு ஏற்று கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், 7ஆவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என எம்.பி.க்கள் மனோஜ் ஜா, ராகவ் சட்டா, ரஞ்சித் ரஞ்சன், சையத் நசீர் ஹுசைன், ஜேபி மாதர், டாக்டர் வி. சிவதாசன் மற்றும் சந்தீப் பதக் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர். அதேபோல, மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்னவாகும்?
மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 272 ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசுக்கு 331 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு மட்டும் 303 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு 144 உறுப்பினர்கள் உள்ளனர்.
இரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத கே.சி.ஆரின் பி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி., நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைவது உறுதி. இருப்பினும், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை பதில் அளிக்க வைக்கவே இதை கொண்டு வந்து கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.