உபெர் ஓட்டுநரின் மனிதத்துவம்.... மொழித்தடையை தாண்டி கனிவுடன் நடத்தினார்... இணையத்தில் லைக்ஸ் அள்ளும் நெகிழ்ச்சிப் பதிவு!
”50களில் நடைபோடும் இந்த சராசரி மனிதர் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்த வேகமான அவசர வாழ்க்கையில் எங்கோ மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது"
உபெர் ஓட்டுநர் குறித்த லிங்க்ட்இன் பயனர் ஒருவரின் நெகிழ்ச்சியூட்டும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலை கண் விழிப்பது முதல் தூங்கச்செல்லும் வரை பரபரவென்று எதையோ தேடியபடி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் நம் வீட்டு நபர்களின் அருகில் அமர்ந்து பேசுவதற்கும் அவர்களுடன் உண்டு மகிழ்ந்திருப்பதற்கும்கூட நேரம் செலவிட முடிவதில்லை.
நகர வாழ்க்கை வேறு வழியே இல்லாமல் நம்மை இன்னும் சுயநலன் சார்ந்து சிந்திக்க வைத்து ஓட வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மொழித்தடை தாண்டி கனிவு
இத்தகைய பரபரப்பான நகர சூழலில் தான் சந்தித்த தன்னலமற்ற உபெரர் ஓட்டுநர் குறித்து ஹர்ஷ் ஷர்மா எனும் லின்க்ட் இன் பயனர் எழுதியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.
பெங்களூரில் அவரது வண்டியில் பயணித்த ஒரே காரணம் தவிர்த்து முன்பின் தெரியாத தன்னிடம் ரவி எனும் உபெர் ஓட்டுநர் காட்டிய அன்பு குறித்து ஹர்ஷ் சர்மா பதிவுட்டுள்ளார்.
"இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபர், எனது உறவினரோ, நண்பரோ அல்லது இச்சம்பவம் நிகழும் வரை நாங்கள் தெரிந்தவர்கள் இல்லை.
எங்களுக்குள் மொழித் தடை இருந்தது, அதனால் பிற ஓட்டுநர்கள் போல் தெரிந்தவர்களுடன் செல்போனில் பேசியபடி அவர் பயணிக்கவில்லை. நான் விமானத்தில் வந்து இறங்கியதால் சரியாக தூங்காததை அவர் கண்டுகொண்டார்.
நான் படுக்க இருக்கைகளை ஏற்பாடு செய்தார். தொடர்ந்து காலை உணவு பற்றி கேட்டார். நான் சாப்பிடவில்லை என சொன்னதை அடுத்து என்னை தூங்குமாறும், நல்ல உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தி எழுப்பி விடுவதாகவும் சொன்னார்.
நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவர் என்னை எழுப்பினார். நாங்கள் மிகவும் நெரிசலான உணவகம் ஒன்றுக்கு சென்றோம். அவர் எனக்காக ஒரு டேபிள் ஏற்பாடு செய்தார்.செல்ஃப் சர்வீஸ் உணவகத்திலும் மெனுவை என்னிடம் கொண்டு வந்து தென்னிந்தியாவின் சில சிறந்த உணவுகளை பரிந்துரைத்தார்.
ஒரு மணி நேரம் முன் தான் அவரை சந்தித்திருப்பேன், ஆனால் என்னை அவர் சாப்பாட்டு மேசையை விட்டு எழவிடவில்லை, என்னை தனது மகனைப் போல் நடத்தினார்.
50களில் நடைபோடும் இந்த சராசரி மனிதர் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். இந்த வேகமான அவசர வாழ்க்கையில் எங்கோ மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது" என உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஹர்ஷ் ஷர்மாவின் இந்தப் பதிவு 30,000 லைக்குகளைப் பெற்று லிங்க்ட் இன்னில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், நெட்டிசன்கள் நெகிழ்ச்சி கமெண்டுகளையும், தாங்கள் சந்தித்த இதுபோன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!