கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: இடுக்கியில் ஒருவர் உயிரிழப்பு! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
நிலச்சரிவு அபாயம் ஏற்படலாம் அச்சமடைந்த அதிகாரிகள், லட்சுமண் வீடு காலனியில் 22 குடும்பங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பிஜி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி தேசிய நெடுஞ்சாலையை பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் அடிமலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தொடர் மழைகாரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்படலாம் அச்சமடைந்த அதிகாரிகள், லட்சுமண் வீடு காலனியில் 22 குடும்பங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
நிலச்சரிவில் மக்கள் சிலர் சிக்கிக் கொண்ட தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களில் பிஜூ மற்றும் அவரது மனைவி சந்தியா இருவரும் வீட்டில் இருந்து சில பொருட்களை எடுப்பதற்காக நேற்று இரவு லட்சுமண் வீடு காலனிக்கு மீண்டும் சென்றிருந்தனர். அப்போது எதிர்பார்த்தபடி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 50 அடி உயர மலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்தது. இந்த பயங்கர நிலச்சரிவில் லட்சுமண் வீடு காலனியில் இருந்த வீடுகள் அனைத்தும் பாதிப்படைந்தன. பொருட்களை எடுப்பதற்காக சென்ற பிஜூவும் அவரது மனைவி சந்தியாவும் நிலச்சரிவில் சிக்கினர்.
இவர்களில் பிஜூ சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி சந்தியா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த லட்சுமண் வீடு காலனியில் இருந்து ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் 22 குடும்பத்தினரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அதிகாலையில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில், குறிப்பாக மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை மற்றும் வெள்ளாரிமலை கிராமங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலைப்பகுதிகளில் இருந்த ரிசார்ட்கள், வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் 318 பேர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலச்சரிவுகள் மிகக் கடுமையான மழையின் காரணமாக மலைப்பகுதிகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்டன. இது கேரள வரலாற்றிலேயே மிகவும் கொடிய பேரழிவுகளில் ஒன்றாகும்.





















