(Source: ECI/ABP News/ABP Majha)
மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் இல. கணேசன்! ஆளுநர் பதவிகளில் ஜொலிக்கும் தமிழர்கள்!
மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்து வரும் இல. கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
மேற்கு வங்க அரசுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்த வந்த அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்கத்தின் ஆளுநர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என கேள்வி எழுந்தது. இச்சூழலில், மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்து வரும் இல. கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்குவங்க ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த இல. கணேசன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டப்பேரவை சபாநாயகர் பீமன் பானர்ஜி உள்ளிட்டோர் ஆளுநரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரியின் துணை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
76 வயதான கணேசன் 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ்., மீது கொண்ட ஈடுபாட்டால் அந்த அமைப்பை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தது பின்னாளில் அவரை மாநிலங்களவை எம்.பி. பதவி வரை உயர்த்தியது. இளைஞராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர். 70களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து சுமார் ஒருவருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
அந்த நாட்களில் தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார். பின்னர் 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இரண்டு முறையும் தோல்வியடைந்தாலும் பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று ராஜ்யசபா உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மத்தியில் திமுக பாரதிய ஜனதாவுடன் நேச உறவில் இருந்த காலத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியுடனும் நட்புறவில் இருந்துள்ளார் கணேசன்.
கட்சியில் கணேசன் கணிவானவர் எனப் பெயர் எடுத்திருந்தாலும் அவர் மீதான சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக 2000ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிருபாநிதிக்கும் லட்சுமணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை அவரது சாதியைக் குறிப்பிட்டு தாக்கினார் கணேசன் என்ற குற்றச்சாட்டு உள்ளது.