பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பறவைகள் மட்டுமின்றி அதனை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளிலும் உள்ள பறவைகளை அழிக்க முடிவு

கேரள மாநிலத்தில் அடிக்கடி பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ள நிலையில், ஆலப்புழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாகவே பறவைகள் கொத்துக்கொத்தாக இறந்ததாக தகவல் பரவியது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்து உள்ளிட்ட பறவைகள் இறந்ததன் காரணமாக நடைபெற்ற சோதனைகளில் பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது.
பறவைகளை அழிக்க உத்தரவு
ஆலப்புழா மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கோழிகள், வாத்துக்கள் மற்றும் காடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பறவைகளுக்கு எச்5 என்1 வகை பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததையடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பறவைகள் மட்டுமின்றி அதனை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளிலும் உள்ள பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு ஊசிகள் மூலம் பறவையழிப்பு நடைபெற்றது. இந்நடவடிக்கை மூலமாக சுமார் 20 ஆயிரம் பறவைகள் அழிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பண்ணைகள் அமைவிடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
கேரளத்தில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எல்லையை ஒட்டிய தமிழகப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதோடு, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முனெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















