"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
கணவனை இழந்த 40 வயது பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 21 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த நபர் கைது

"திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை"
சென்னை ஆவடியைச் சேர்ந்த 40 வயது பெண், கணவர் இறந்த நிலையில் , 16 வயது மகன், 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு , 2025 - ல் ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், என்பவர் அறிமுகமானார். ராஜேஷ்குமார் தான், தனியாக வசித்து வருவதாகவும் , விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் , வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபராக கூறி அப்பெண்ணிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி , நிதி நெருக்கடி மற்றும் குடும்பச் செலவு எனக் கூறி பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, அப்பெண், தன்னிடம் உள்ள நகைகள், பணம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து என, 21 லட்சம் ரூபாயை ராஜேஷ் குமாரிடம் கொடுத்துள்ளார்.
"அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்"
இதற்கிடையே அப்பெண்ணின் கணவர் என கூறி , அப்பெண்ணின் ஆதார் கார்டில் ராஜேஷ்குமார் திருத்தம் செய்துள்ளார். அந்த ஆதார் கார்டு ராஜேஷ்குமாரின் மனைவியின் முகவரிக்கு சென்றது. அதில் உள்ள மொபைல் எண்ணை வைத்து , அப்பெண்ணை தொடர்பு கொண்டு ராஜேஷ்குமார் தன்னுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜேஷ் குமாரிடம் அந்த பெண் கேட்ட போது, அவரை அடித்து துன்புறுத்தி, தான் எடுத்து வைத்துள்ள அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து ஆவடி மத்திய குற்றப் பிரிவில் அப்பெண் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஆவடி குற்றப் பிரிவு போலீசார் ராஜேஷ் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து 'மாருதி பிரான்ஸ்' கார், ஐ - பேட், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
ராஜேஷ்குமார், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 'ஆன்லைன் டிரேடிங்' செய்வதாக கூறி 40 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாகவும், மேலும் கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து ஏமாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















