'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் - முதலமைச்சர் விஜய்

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில், ‘கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்
‘தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நாளைய திருச்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டடம் திறப்பு, ரோடு ஷோ என பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















