மத்திய பிரதேசத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்; ஒன்றிணைந்து எதிர்த்த தென்னிந்திய முதலமைச்சர்கள்..!
கடந்த 10ம் தேதி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவர்கள் மெயின் கேட் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, பாதுகாப்பு ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் அமர்கண்டக் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் (ஐஜிஎன்டியு) கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
கடந்த 10ஆம் தேதி மத்திய பிரதேச இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவர்கள் மெயின் கேட் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, பாதுகாப்பு ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் கண்டனம்:
நம் நாட்டில் தனிநபர்கள் மீது அவர்களின் அடையாளங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் விரோதப் போக்கை எதிர்ப்பதன் அவசியத்தை இம்மாதிரியான தாக்குதல்கள் எடுத்துரைக்கின்றன. பல்கலைக்கழகம் குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "ஐஜிஎன்டியுவில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் மீது மாணவர்களைப் பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட பாதுகாப்புப் பணியாளர்களே நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். இம்மாதிரியாக அதிகரிக்கும் தாக்குதல் சம்பவங்களில் மத்திய அரசு தலையிட்டு அதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.
குறிவைக்கப்படும் கேரள மாணவர்கள்:
இது தொடர்பாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கேரள சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சதீசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "பல்கலைக்கழகத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களை பாதுகாப்புப் பணியாளர்களே கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அளித்த புகாரின்படி, கேரள மாணவர்கள் தொடர்ந்து ஐ.ஜி.என்.டி.யு-வில் குறிவைக்கப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாதபடி குற்றவாளிகளை கைது செய்ய நீங்கள் தலையீடு வேண்டும் என நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் எழுதியுள்ள கடிதத்தில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: Parliament Rahul Gandhi : ”வெட்கக்கேடானது..” ராகுல் காந்தியை தாக்கி பேசிய மத்திய அமைச்சர்கள்...முதல் நாளே முடங்கிய நாடாளுமன்றம்..!