கேரளாவில் சோகம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் மரணம்
கேரளாவில் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி மூன்று தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் ஒரு சோகமான சம்பவம் நடந்தது. நேற்று இரவு, ஒரு ஹோட்டலின் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் மூன்று தமிழக தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம், கட்டப்பனை நகரில் இந்த துயர சம்பவம் நடந்தது. இறந்த மூன்று தொழிலாளர்களும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக கட்டப்பனைக்கு சென்றிருந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தேனி மாவட்டம் கம்பம், கூடலூரை சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை-புளியன்மலை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்புறம் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடந்தது.

நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியான விஷ வாயு தாக்கியதில் மூன்று பேர் மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்ததும் நிகழ்விடம் வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கட்டப்பனை காவல் ஆய்வாளர் டி.சி. முருகன் தலைமையிலான காவல்துறையினர் மூவரையும் மீட்டு கட்டட்டனை தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. விஷவாயு தாக்கி உயிழிந்தவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராமன், கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் என்ற செல்வன் மற்றும் சுந்தர பாண்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொட்டியில் முதலில் நுழைந்த மைக்கேல் வர தாமதமானபோது, ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே சென்றுள்ளார்.

அவரும் வராததால் அவர்களைத் தேடி மூன்றாவதாக சுந்தர பாண்டியன் சென்றுள்ளார். மூன்று பேரும் வெளியே வராததாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததாலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களும் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது குறித்து கட்டப்பனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரியுள்ளார்.





















