Kerala Stray Dogs : தொல்லை தரும் தெரு நாய்கள்... கருணைக் கொலை தயாராகும் கேரள அரசு... நடந்தது என்ன?
கேரளாவில் மக்களின் உயிரை பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
Kerala Stray Dogs : கேரளாவில் மக்களின் உயிரை பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
கேரளாவில் நாய் தொல்லை:
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, அவற்றால் கடிக்கப்பட்டு பெரியவர், சிறியவர் என நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அத்தகைய சில சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கும் விதமாகவும் உள்ளன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதால், அதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. தெருநாய் கடித்து 2019 ஆம் ஆண்டு 5,794 வழக்குகளும், 2020ல் 3,951 வழக்குகளும், 2021ல் 7,927 வழக்குகளும், 2022ல் 11,776 வழக்குகளும், 2023 கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 6,276 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொலை செய்ய திட்டமா?
இந்நிலையில், உயிரை பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று அமைச்சர் ராஜேஷ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ், "தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் மாநிலத்தில் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உடல்நிலை சரியில்லாமலும், ஆபத்தான நாய்களையும் கொலை செய்ய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சட்டத்தை மீறி நாய்களை கொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அரசு எடுக்கும்" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே மாநிலத்தில் மிகவும் ஆபத்தான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு குறித்து கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
முன்னதாக விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960இன் கீழ், விலங்கு இனவிருந்து கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விதிகளை முறையாக அமல்படுத்தி விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டத்தை (Animal Birth Control Programme) உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial