Kerala Governor vs VC: 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யச்சொன்ன ஆளுநர்; பதவியை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் 9 பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என ஆளுநர் கூறிய நிலையில், பதவியை தொடரலாம் என உயர்நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் தேதி, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரியாக அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.
”நியமனத்தில் முறைகேடு”
இதையடுத்து, உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், மேலும் 9 துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் தெரிவித்திருந்தாவது, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் இன்று காலை 11:30 மணிக்குள் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் கேட்டு கொண்டிருந்தார்
மேலும், சட்டத்தின்படி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து, ஒருவரை வேந்தரான ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறியிருந்தார்.
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுக்குதான் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு:
அதற்கு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, பாதிக்கப்பட்ட அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியது. கேரள ஆளுநர், மாநில அரசுக்கு இடையேயான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.
அதிகாரங்கள் மீதான அத்துமீறல்:
இந்நிலையில், ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை அழிக்கும் நோக்கத்துடன் போர் தொடுத்துள்ளார். சங்பரிவாரின் ஆயுதமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்கள் மற்றும் கல்வி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களின் மீதான அத்துமீறலாகும்" என்றார்.
பதவியை தொடரலாம்:
All 9 VCs can continue for now: Kerala High Court on varsity row
— ANI Digital (@ani_digital) October 24, 2022
Read @ANI Story | https://t.co/JraiLo9huH
#KeralaHighCourt #VarsityRow pic.twitter.com/pHeqa6s5jf
இந்நிலையில், ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும் என கூறியதை எதிர்த்து, துணை வேந்தர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலயில், இவ்வழக்கு அவசர வழக்காக இன்று மாலை 4 மணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது, 9 துணை வேந்தர்களும் பதவியை தொடரலாம் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து ஆளுநர் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை பதவியை தொடரலாம் என தெரிவித்துள்ளது.