அடுத்தடுத்து அதிர்ச்சி.. தெரு நாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தை படுகாயம்.. பதறித்துடித்த உறவினர்..
கேரளாவில் தெரு நாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இந்தியாவில் மனிதர்களின் செல்லப்பிராணிகளாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பது நாய்கள். வீடுகளிலும், தெருக்களிலும் நாய்கள் நடமாட்டம் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. நாய்களை முறையாக பராமரிக்காவிட்டாலோ, அல்லது அதன் மூலம் ஏற்படும் தொற்றுகளினாலோ மனிதர்களுக்கு பல வித வியாதிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக, நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதுவும் வெறிபிடித்த நாய் கடிப்பதற்கு உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் மனிதனின் செயல்பாடுகள் நாயைப் போலவே மாறுவதற்கான ஆபத்துகள் அதிகளவில் உள்ளது.
ஒன்றரை வயது குழந்தை படுகாயம்
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் குழந்தையின் பாட்டி, வீட்டிற்கு வெளியே குழந்தைக்கு உணவு கொடுத்திருந்தார். குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு பாட்டி வீட்டிற்குள் சென்றபோது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு, வீட்டின் முன்பு வந்த பார்த்தபோது, சுமார் 27 தெரு நாய்கள் குழந்தையை தாக்கிக் கொண்டிருந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பாட்டி, அருகில் இருக்கும் மரப்பலகையை எடுத்து நாய்களை தூரத்தினார். இதில் தெரு நாய்கள் தாக்கியதில் குழந்தை படுகாயமடைந்தது. இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு, கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மயிலபுறம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அபிராமி. இவர் பால் வாங்க கடைக்கு செல்லும்போது தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் அபிராமியின் கை, கால், கண் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயம் ஏற்பட்டு, அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு, ஐந்து நாட்களுக்கு பின், சிசிக்கை பலனின்றி 12 வயது சிறுமி அபிராமி உயிரிழந்துள்ளார்.
21 பேர் உயிரிழப்பு
சமீப காலமாக கேரளா மாநிலத்தில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. இந்த தெரு நாய்க்கடிக்கு ’ரேபிஸ்’ என்ற அறிவியல் பெயரும் உண்டு. பொதுவாக ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் மனிதன் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய் கடிப்பதால் மனிதனின் மூளையின் மைய நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மூளை கடுமையாக பாதிக்கப்படும்போது, இறுதியில் மரணத்தை தழுவ நேரிடுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மட்டும், கேரள மாநிலத்தில் 21 பேர் தெரு நாய்க்கடியால் இறந்துள்ளதாகவும், 1.9 லட்சம் பேரை நாய் கடித்து படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2017-ஆம் ஆண்டில் நாய் கடித்ததில் 1.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் எண்ணிக்கையானது 2.21 லட்சமாக உயர்ந்துள்ளது என தரவுகள் வெளியாகி உள்ளது.