Kavitha TRS: BRS-க்கு ஷாக் கொடுத்த கவிதா; TRS என்ற புதிய கட்சியை தொடங்கி அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ் மகள்
தெலங்கானா அரசியலில் பரபரப்பு செய்தியாக, பி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, இன்று 'தெலங்கானா ராஷ்டிர சேனா' என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார்.

தெலங்கானா மாநில அரசியலில் மற்றொரு கட்சி உருவாகி உள்ளது. நீண்ட காலமாக பி.ஆர்.எஸ் கட்சியில் முக்கிய பங்காற்றிய கல்வகுந்த்லா கவிதா, இப்போது தனது தந்தையின் நிழலிலிருந்து வெளியேறி, ஒரு சுதந்திரமான அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தெலங்கானா ராஷ்டிர சேனாவை தனது புதிய கட்சியாக அவர் அறிவித்தார். அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கவிதாவின் முடிவுக்கு காரணம் என்ன.?
கவிதாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டில், பி.ஆர்.எஸ் கட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகள் தான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பி.ஆர்.எஸ் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சந்திரசேகர ராவுக்கு ஒரு கடிதம் எழுதினார் கவிதா. அந்த கடிதம் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கசிவுக்காக கே.சி.ஆருக்கு நெருக்கமானவர்களை அவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தார். குறிப்பாக, கட்சியின் முக்கிய தலைவர்களான ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோருக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகள், கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தின. செப்டம்பர் 2-ம் தேதி அன்று, ஒழுக்க மீறல் குற்றச்சாட்டின் பேரில் பி.ஆர்.எஸ் கட்சி கவிதாவை இடைநீக்கம் செய்தது.
மறுநாள், அவர் தனது எம்.எல்.சி பதவியிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். அன்று முதல், தனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தார் கவிதா. அதன் ஒரு பகுதியாக, ‘தெலங்கானா ஜக்ருதி‘ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுச் பிரச்னைகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், தெலங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து, பிரபல முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
புதிய கட்சியை அறிவித்த கவிதா
இந்த நிலையில், தெலங்கானாவின் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயங்கும் வகையில், அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக சமீபத்தில் கவிதா அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை ஐதராபாத் அருகே முனிராபாத் பகுதியல் உள்ள ஒரு அரங்கில், கவிதா தனது புதிய கட்சியை அறிவித்தார். அந்த கட்சியின் பெயர் தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) என்பதாகும்.
#WATCH | Hyderabad, Telangana: Telangana Jagruthi Founder K. Kavitha launches her new political party 'TRS'- Telangana Rashtra Sena.
— ANI (@ANI) April 25, 2026
(Source: K Kavitha Social Media Page) pic.twitter.com/XwMV80vQMA
கட்சி அறிவிப்பு நிகழ்வின்போது பேசிய கவிதா, கடின உழைப்பின் மூலம் தெலங்கானாவில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவெடுத்துள்ளதாகவும், இது தனது வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் எதிர்காலத்திற்காக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பல இன்னல்களை சந்தித்த பிறகும் தெலங்கானாவிற்காக போராடியதாக குறிப்பிட்டார்.
இதன் மூலம், தெலங்கானா அரசியலில் மற்றொரு புதிய கட்சி உருவெடுத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















