Karnataka Rains: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை... அதிகரிக்கும் நீர் வரத்து..!
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் , கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் , கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் கடலோரப் பகுதியில் இன்று வரை அதாவது ஜூலை 24ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை நீட்டித்துள்ளதுடன், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணிக்கும் நீர்வரத்து அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானால், டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருப்பதுடன் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு மகசூல் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 154 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 165 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக உடுப்பி, குடகு மற்றும் தார்வாட் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், மழை பெய்யும் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு, வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பெலகாவி, யாத்கிர், தார்வாட் மற்றும் பிதார் மாவட்டங்களுக்கும் மாநில வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும்.
வட கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, இப்பகுதியில் உள்ள 16 குறைந்த உயரமுள்ள பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் நடமாட்டம் தடைபட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்யவும், பேரிடர் ஏற்படாமல் தடுக்கவும், பாலங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை காவல் துறையினர் தடுத்துள்ளனர். பாலங்களின் இரு முனைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, 11 வயது அபி மற்றும் 12 வயது அஜய் ஆகிய இரண்டு குழந்தைகள் கலபுர்கியில் உள்ள துபாய் நகரில் மழைநீர் நிரம்பிய குளத்தில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 88.48 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 15.05 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,985 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 393 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.