இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதின்னு சொன்ன ஆசிரியர்: சப்போர்ட் செய்யும் பாஜக அமைச்சர்!
'ராவணன்' மற்றும் 'சகுனி' போன்ற வார்த்தைகளை அனைவரும் தினமும் பயன்படுத்துகின்றனர். சட்டப்பேரவையில் கூட பலமுறை இப்படி பேசியிருக்கிறோம்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறையில் இஸ்லாமிய மாணவனுக்கும் பேராசிரியர் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
கடலோர கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் தன்னை பயங்கரவாதி என அழைத்ததற்காக இஸ்லாமிய மாணவன் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதி என அழைத்தது பெரிய விஷயம் அல்ல என பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், "ராவணன்' மற்றும் 'சகுனி' போன்ற வார்த்தைகளை அனைவரும் தினமும் பயன்படுத்துகின்றனர்.
சட்டப்பேரவையில் கூட பலமுறை இப்படி பேசியிருக்கிறோம். அது ஒரு பிரச்சினை ஆகாது. கசாப்பைப் பற்றி யாராவது பேசினால் அது ஏன் பிரச்சினையாகிறது? ஆசிரியர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால், இப்போது அது அரசியல்மயமாக்கப்பட்டு, வாக்கு வங்கிக்காக பயன்படுகிறது" என்றார்.
26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட ஒரே பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் ஆவார். இவர், 2012 இல் தூக்கிலிடப்பட்டார்.
முன்னதாக, உடுப்பியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கடந்த வாரம், ஒரு பேராசிரியர் ஒரு மாணவரிடம் அவரது பெயரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவனின் முஸ்லீம் பெயரைக் கேட்டதும், "ஓ, நீங்கள் கசாப் போல இருக்கிறீர்கள்!" என பேராசிரியர் சொல்லி இருக்கிறார். இதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் மன்னிப்பு கேட்டார்.
வகுப்பறையில் நடந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்த மாதிரியான கருத்தை எப்படி சொல்லலாம் என மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
In Manipal University
— Thanos Pandit ™ (@Thanos_pandith) November 28, 2022
Hats off to this student who showed the teacher his place
Another incident of Islamophobia
Countered by Young Student .https://t.co/jOyOI81v97 pic.twitter.com/YtoxDXmb3Z
இது நகைச்சுவையான முறையில் கூறப்பட்டது என்று பேராசிரியர் தெளிவுபடுத்தினார். ஆனால், அதை ஏற்று கொள்ளாத மாணவன், "26/11 பயங்கரவாத சம்பவம் வேடிக்கையானது அல்ல. முஸ்லீமாக இருந்து இந்த நாட்டில் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்வது வேடிக்கையானது அல்ல" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மாணவன் தன்னுடை மகனை போன்றவர் என பேராசிரியர் கூறுகிறார். அதற்கு அந்த மாணவர், “உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? வகுப்பில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிடுவீர்களா? மன்னிப்பு கேட்பது மட்டும் உதவாது. நீங்கள் இங்கே எப்படி சித்தரிக்கிறீர்கள் என்பதை இது மாற்றாது" என பதில் அளித்தார்.