Sudeep Support BJP: பா.ஜ.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கிய 'நான் ஈ' வில்லன்..! தாமரை சின்னத்தில் போட்டியா..? பரபரப்புக்கும் தேர்தல் களம்..!
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக கிச்சா சுதீப் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் பாஜக, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
வியூகம் அமைத்த பாஜக:
ரத்து செய்தது மட்டும் இன்றி, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத் மற்றும் வொக்கலிகாவுக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்தது. தேர்தலை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கன்னட சினிமா நடிகர் கிச்சா சுதீப்பை களத்தில் இறக்கியுள்ளது பாஜக. வரும் சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக கிச்சா சுதீப் அறிவித்துள்ளார். ஆனால், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறியுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவு அளித்த நடிகர்:
முன்னதாக, கிச்சா சுதீப் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த சூழ்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்துள்ளார் சுதீப். பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய ஆதரவை கர்நாடக முதலமைச்சர் பொம்மைக்கு வழங்குகிறேன்" என்றார்.
பின்னர் பேசிய பசவராஜ் பொம்மை, "சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அவர் எனக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் எனக்கு அளித்த ஆதரவு என்பதை அவர் பாஜகவுக்கு அளித்த ஆதரவாக கருத வேண்டும்" என்றார்.
பாஜக கட்சியில் நடிகர் சுதீப் இணைய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவிய உடனேயே அவருக்கு மிரட்டல் கடிதங்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வந்துள்ளன. அந்த மிரட்டல் கடிதத்தில் 'தனிப்பட்ட வீடியோக்கள்' இணையத்தில் லீக் செய்யப்படும் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மிரட்டல் கடிதம்:
மேலும் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தரங்க வீடியோக்கள் வெளியிடப்படும் என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 506 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து பேசிய சுதீப், "ஆம், எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதை எனக்கு அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். இது சினிமா துறையில் உள்ள ஒருவரிடமிருந்து வந்தது எனக்கு தெரியும். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். எனது கடினமான காலங்களில் என் பக்கம் நிற்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவேன்" என்றார்.