(Source: ECI/ABP News/ABP Majha)
"தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது" கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிரடி முடிவு!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மீண்டும் மறுத்துள்ளது. வரும் ஜூலை 31ஆம் தேதி வரை, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்காக தினமும் 11,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்: இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அவசர கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.
இன்றைய கூட்டத்தில், கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் முடிவை விளக்கிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, "தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை செயல்படுத்த முடியாது. கர்நாடக பாதனப் பகுதிகளில் 28 சதவிகிதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
கர்நாடக அரசின் அதிரடி முடிவு: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வரும் 14ஆம் தேதி, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்" என்றார்.
கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்தது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
நான்கு அணைகளின் கொள்ளளவு 59.93 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. இது நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 52%க்கும் அதிகம். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் கடந்த ஜூன் 24&ஆம் தேதி நிலவரப்படி 37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 4,448 கன அடி என்ற அளவில் தான் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 43,506 கன அடி என்ற அளவை எட்டி, அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது.
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை எழுந்து வருகிறது.