Karnataka Cabinet Expansion: கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்... 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு... யார் யார் தெரியுமா...?
கர்நாடகாவில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
Karnataka Cabinet Expansion : கர்நாடகாவில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
கர்நாடகாவில் மாஸ் காட்டிய காங்கிரஸ்
கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக மாறியது. அக்கட்சியின் இந்த தேர்தல் வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
இதற்கிடையில் அனைவரது எதிர்பார்ப்பும் கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வியை நோக்கியே இருந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவுக்கும், மாநில தலைவரான டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டனர். கிட்டதட்ட ஒரு வாரம் முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்தது. இறுதியாக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து மே 20ம் தேதி பதவியேற்பு விழாவும் கோலாகலமாக நடந்தது.
இதனைத் தொடர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்படி, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். சித்தராமையா, சிவக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு 24 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்தனர். இந்த பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அந்த வகையில், பெங்களூருவில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று காலை 11.45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
24 அமைச்சர்கள் பட்டியல்
எச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, என்.செலுவராயசாமி, கே.வெங்கடேஷ், எச்.சி.மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திர என்.ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மேலும், சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஆர்.ஹெப்பால்கள், ரகீம் கான், டி.சுதாகர், சந்தேஷ் எஸ்.லாட், என்.எஸ்.போஸ்ராஜூ, பி.எஸ்.சுரேஷ், மது பங்காரப்பா, எம்.சி.சுதாகர், பி.நாகேந்திரா ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மேற்கண்ட 24 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.