CJI UU Lalit Oath: 49வது தலைமை நீதிபதி.. 74 நாட்கள் பதவி..! பொறுப்பேற்றுக்கொண்டார் நீதிபதி யு.யு.லலித்!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை இவருக்கு குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பதவி பிரமானம் செய்து வைத்தார்.
அதில் பதவி பிராமனம் எடுத்து கொண்ட யு.யு.லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இவருடைய பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இவர் 74 நாட்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | President Droupadi Murmu administers the oath of Office of the Chief Justice of India to Justice Uday Umesh Lalit at Rashtrapati Bhavan pic.twitter.com/HqayMJDwBB
— ANI (@ANI) August 27, 2022
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யு.யு. லலித் மூத்த நீதிபதியாக இருந்த போது காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று சக நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பிறந்த யு.யு.லலித், தனது 27வது வயதில் 1983 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் 2014 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், 2ஜி வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதியாக தேர்வாகியிருந்த யுயு லலித் சிறப்பு உரையாற்றினார். அந்த உரையில் அவர் உச்சநீதிமன்றத்தில் கொண்டு வர உள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசினார். அதன்படி அவர் உச்சநீதிமன்றத்தில் 3 விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
முதலில் வழக்குகளை பட்டியலிடுவதில் கூடுதல் வெளிப்படை தன்மை கொண்டு வர உள்ளதாக கூறினார். இரண்டாவதாக அவசர வழக்குகள் தொடர்பாக உடனடியாக முறையிட ஒரு வழி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இவை தவிர உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து செயல்படும் வகையில் வழி வகுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் அவர், “உச்சநீதிமன்றத்தின் முக்கியமான பங்கு ஒரு சட்டம் அல்லது தீர்ப்பை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும்படி அளிக்க வேண்டும் என்பது தான். அதை செய்ய அதிகமான நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். அப்போது இந்த விவகாரங்களில் உள்ள குழப்பங்கள் தெளிவு பெற்று தெளிவான தீர்ப்பை அளிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க:காத்து வாக்குல ரெண்டு காதல்! காதலனுக்காக பேருந்து நிலையத்தில் அடிபிடி சண்டையிட்ட 2 சிறுமிகள்!