நீதிக்காக 15 ஆண்டுகால போராட்டம்! பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாட்டையே உலுக்கிய சம்பவம்:
இந்தியாவில் நிகழ்ந்த மறக்க முடியாத கொலை சம்பவங்களில் ஒன்றுக்கு இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன், வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொடூர கொலை சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலையை யார் செய்தது? என்ற தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். பின்னர், ஜிகிஷா கோஷ் என்பவரின் கொலை தொடர்பான விசாரணையில், பத்திரிகையாளர் சௌமியா கொலை வழக்கில் துப்பு கிடைத்தது.
அதாவது, ஜிகிஷா கொலை வழக்கிலும், பத்திரிகையாளர் சௌமியா கொலை வழக்கிலும் ஒரே மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, ஜிகிஷா கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் ஒருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், சௌமியா கொலையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணையில் ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக், அஜய் சேத்தி ஆகியோர் மீது மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு:
அன்று முதல் இந்த வழக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகள் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுத் தரப்புக்கு 13 ஆண்டுகள் ஆனாதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இருதரப்பு வாதங்களுக்கு முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டட நான்கு பேருக்கான தண்டனை விவரங்களை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்திருக்கிறது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்பீர் மாலிக், அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரவி கபூர், அமித் சுக்லா, பல்பீர் மாலிக், அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதமும், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
நான்கு குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரூ.1.2 லட்சத்தை சௌமியா விஸ்வநாதனின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நான்கு பேருக்கு உதவியதற்காக ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அஜய் சேத்தி அபராத தொகையில் இருந்து ரூ.7.2 லட்சத்தை சௌமியா குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிதிமன்றம் கூறுகையில், "இளம், ஆற்றல் மிக்க கடினமான உழைப்பாளி பத்திரிக்கையாளர் சௌமியா உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைந்து வருவது துரதிர்ஷ்டவசமானது. பெண்கள் வேலைக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது கவலையாக உள்ளது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகள் சட்டப்போராடத்திற்கு பிறகு பத்திரிகையாளர் சௌமியா கொலை வழக்கில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.